கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த கரடி குட்டிகளால் பரபரப்பு

கோத்தகிரி அருகே சாலையில் கரடி குட்டிகள் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-08 22:25 GMT

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேயிலை தோட்டங்கள், பேரிக்காய் தோட்டங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழையும் கரடிகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்து வருகின்றனர். நேற்று அரவேனுவில் இருந்து கேசலாடா செல்லும் சாலையில் 3 கரடி குட்டிகள் உலா வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் குட்டிகளை தேடி தாய் கரடி வந்து விடுமோ என்ற பீதியில் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு கரடி குட்டிகள் சென்ற பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கோத்தகிரி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கரடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களை கரடி தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் பீதியுடன் பணிபுரிந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் அந்த கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்