மாவட்ட செய்திகள்
சிக்கமகளூரு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரி ஆய்வு

சிக்கமகளூரு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
சிக்கமகளூரு,

கர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் பருவமழை ஆரம்பித்தது. தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய கடலோர மாவட்டங்களிலும், சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மலைநாடு மாவட்டங்களி லும் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மாநில அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கியது. மேலும் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் கண்காணிப்பு அதிகாரியாக ராஜீவ் சாவ்லா என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிக்கமகளூருவுக்கு அதிகாரி ராஜீவ் சாவ்லா வந்தார். அவர் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட சிருங்கேரி, ஜெயப்புரா, கொப்பா ஆகிய தாலுகாக்களில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கொப்பா தாலுகாவில் உள்ள கொக்கேரி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் சத்தம் ஏற்பட்ட பகுதியிலும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த ராஜீவ் சாவ்லா சிக்கமகளூருவில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டம் முடிந்ததும் ராஜீவ் சாவ்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். கடந்த ஆண்டு பெய்த மழையின் போது விளைச்சல் பாதிக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மழைக்கு 1300 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் மழைக்கு 4 பேர் இறந்து உள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த 6 பேருக்கு தலா ரூ.42 ஆயிரம் வழங்கப் பட்டு உள்ளது. 84 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது. அதனை சரிசெய்ய ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டு உள்ளது. 11 பசுமாடுகள் செத்து உள்ளன. தரிகெரே, கடூர், சிக்கமகளூரு தாலுகாக்களில் போதிய மழை பெய்யாததால் டேங்கர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நான் சிக்கமகளூரு மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரைவிில் அறிக்கை தயாரித்து அரசிடம் வழங்குவேன். அதன் அடிப்படையில் கூடுதல் நிவாரண நிதி அரசு ஒதுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.