ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இலங்கை அகதி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் இலங்கை அகதி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன.

Update: 2018-09-08 23:30 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவர் அதே பகுதியை சேர்ந்த கலானி (30) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தநிலையில் கர்ப்பம் தரித்த கலானியை விஜயகுமார் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலானியை உறவினர்கள் பிரசவத்திற்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்று காலை கலானிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவ ஊழியர்கள் அவரை அறுவை சிகிச்சை அரங்குக்கு கொண்டு சென்றனர். அங்கு கலானிக்கு அழகான 4 குழந்தைகள் பிறந்தன.

இதுகுறித்து கலானியின் உறவினர் ஒருவர் கூறும்போது, ‘‘கலானி கர்ப்பமாக இருந்தபோது தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து சென்றோம். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர், கலானியின் வயிற்றில் 3 குழந்தைகளின் சிசு வளருவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கலானியை பாதுகாப்பாக கவனித்து வந்தோம். ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்த பிறகு கலானிக்கு 4 குழந்தைகள் பிறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். முதல் குழந்தை சுக பிரசவத்தில் பிறந்துவிட்டது. அதன்பின்னர் 3 குழந்தைகளையும் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். இதில் 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் பிறந்துள்ளன. எங்களது உறவினர்களில் சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளன. ஆனால் 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’’, என்றார்.

அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறும்போது, ‘‘900 கிராம், 1 கிலோ 100 கிராம், 1 கிலோ 400 கிராம், 1 கிலோ 600 கிராம் எடையில் குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும், குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள். எடை குறைவாக இருப்பதால் குழந்தைகளை தீவிர கண்காணிப்பில் பராமரித்து வருகிறோம். மேலும், தாய்க்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்’’, என்றார்கள்.

மேலும் செய்திகள்