வாஷியில் ரூ.85 லட்சம் செல்லாத நோட்டுகள் பறிமுதல்

வாஷியில் ரூ.85 லட்சம் செல்லாத நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-08 23:20 GMT
மும்பை,

நவிமும்பை வாஷியில் இருந்து மும்பைக்கு செல்லாத நோட்டுகள் கொண்டு வரப்பட உள்ளதாக குற்றப்பிரிவு ேபாலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று இரவு சயான்-பன்வெல் நெடுஞ்சாலை வாஷி மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு வாகனத்தை மறித்து நிறுத்தினர். பின்னர் வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்தில் இருந்த 2 பெண்கள் உள்பட 10 பேரையும் இறக்கி விட்டு அந்த வாகனத்தில் சோதனை நடத்தினர்.

இதில் அந்த வாகனத்தில் கத்தை, கத்தையாக செல்லாத 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாகனத்தில் வந்த காட்கோபரை சேர்ந்த சாபிக் கான், பாண்டுப்பை சேர்ந்த சேத்தன் பட்டேல், விக்ரோலியை சேர்ந்த ஹாபிப் சேக், காமோட்டேவை சேர்ந்த துஷார் மோகல், செம்பூரை சேர்ந்த தேவிதாஸ் பவார் மற்றும் தாராவி, மலாடை சேர்ந்தவர்கள் என 10 பேரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த பழைய நோட்டுகளை அவர்கள் எங்கிருந்து கொண்டு வந்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்