அமெரிக்கர்களிடம் பண மோசடி : போலி கால்சென்டர் நடத்திய 2 பேர் கைது

செல்போன், மடிக்கணினியில் வைரஸ் தாக்கி இருப்பதாக கூறி, அமெரிக்கர்களிடம் போலி கால்சென்டர் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-08 23:33 GMT
மும்பை,

மும்பை அந்தேரியில் போலி கால்சென்டர் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கால்சென்டரை டேவிட் அல்போன்சா (வயது22), சந்தீப் யாதவ் (28) ஆகிய 2 பேர் நடத்தி வந்தனர். அவர்கள் தங்களது போலி கால்சென்டரில் 39 பேரை பணியமர்த்தி, அவர்களுக்கு அமெரிக்க மக்களிடம் பணமோசடி செய்வது குறித்து பயிற்சி அளித்து உள்ளனர்.

இதன்படி இந்த கால் சென்டரில் பணிபுரிபவர்கள் அமெரிக்கர்களை இணையதள அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு, உங்களது செல்போன் மற்றும் மடிக்கணினியில் வைரஸ் தாக்கி உள்ளது என்று கூறுவார்கள்.

பின்னர் அதை நீக்கி தருவதாக கூறி கிப்ட் கார்டுகள் மூலம், 100 அமெரிக்க டாலர்கள் முதல் 700 அமெரிக்க டாலர்கள் வரை ஒவ்வொரு நபரிடமும் வசூலில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்களிடம் அந்த கால்சென்டரை நடத்தி வந்தவர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி மும்பை குற்றப்பிரிவு சி.ஐ.டி. போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த கால்சென்டரில் சென்று அதிரடி சோதனை நடத்தி டேவிட் அல்போன்சா, சந்தீப் யாதவ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் கால்சென்டரில் இருந்த கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 3 நாட்கள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்