சிவசேனா, நவநிர்மாண் சேனாவுக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு

முழு அடைப்பில் கலந்துகொள்ள சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

Update: 2018-09-08 23:41 GMT
மும்பை,

பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(திங்கட்கிழமை) நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது. மராட்டியத்தில் இந்த முழு அடைப்புக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் மற்றும் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர். இதில் ஆளும் பா.ஜனதா கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனாவை போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கும் வகையில் அவர்கள் பேசினர். சஞ்சய் நிருபம் கூறுகையில், “எங்களது முழு அடைப்பு போராட்டத்துக்கு சிவசேனா ஆதரவு அளிக்க வேண்டும். இது தொடர்பாக எங்களது கட்சி தலைவர் அசோக் சவான், உத்தவ் தாக்கரே யுடன் தொடர்பில் உள்ளார்” என்றார்.

நவாப் மாலிக் கூறியதாவது:-

நவநிர்மாண் கட்சி தலைவர் ராஜ் தாக்கரே எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயல்படவேண்டும் என்று கூறியுள்ளார். எனவே அவர் நாடு தழுவிய முழு அடைப்பில் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கிறேன்.

இதேபோல் பா.ஜனதா கட்சிக்கு பேரதிர்ச்சி அளிக்க சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

நாட்டின் நிதி தலைநகரான மும்பை முடங்கினால், அது நாடுமுழுவதும் முழு அடைப்பு ஏற்பட்டதற்கு சமமாகும்.

பா.ஜனதா கட்சி 22 மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ளது. அக்கட்சி நினைத்தால் எளிதாக பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் எடுத்துவர முடியும்.

முன்பு வறட்சியை காரணம் காட்டி அரசு அதிக கூடுதல் வரி விதித்தது. தற்போது, வறட்சி முடிந்த பின்பும் கூடுதல் வரி தொடர்கிறது.

நெடுஞ்சாலைகளில் மதுபான விற்பனைக்கு தடை விதித்ததால் இழந்த வரி வருவாயை ஈடுகட்ட எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்