தண்ணீரில் குதித்து விளையாடிய போது பரிதாபம்: தலையில் கல் குத்தி பிளஸ்-1 மாணவர் பலி

கம்பரசம்பேட்டை தடுப்பணை தண்ணீரில் குதித்து விளையாடிய போது தலையில் கல் குத்தி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-09-09 00:12 GMT
ஜீயபுரம்,

திருச்சி அரியமங்கலம் அந்தோணிசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் அன்புநேசன் (வயது 16). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அன்புநேசன் நண்பர்களோடு கம்பரசம்பேட்டை தடுப்பணைக்கு வந்தார். பின்னர் அனைவரும் தடுப்பணையில் உள்ள தண்ணீருக்குள் குதித்து விளையாடினர். அன்புநேசன் தடுப்பணை கட்டையில் ஏறி தண்ணீரில் குதித்தபோது, தண்ணீருக்குள் கிடந்த கல் அவரது தலையில் குத்தி ரத்தம் கொட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, நண்பர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த போது மாணவர் அன்புநேசன் உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பரசம்பேட்டை தடுப்பணையில் குளித்தபோது மாணவர் இறந்த சம்பவம் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்