உலக அழகுப் போட்டியில் உலுக்கிய கேள்விகள்

உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் அழகுப் பெண்களிடம் கேட்கப்பட்ட சில அதிரடி கேள்விகள்தான் இவை. உலக அழகிப் போட்டி வெறும் உடல் அழகிற்கானது மட்டுமல்ல என்பதை விளக்குகிறது இந்த கேள்விகள்.

Update: 2018-09-09 11:21 GMT
உலகில் எந்தத் தொழில் அதிக சம்பளத்திற்கு தகுதியானது?

வேற்றுக்கிரகவாசிகள் உங்கள் முன் இறங்கிவந்தால் எப்படி உபசரிப்பீர்கள்?

உடம்பில் எந்த உறுப்பை மாற்றி அமைக்க விரும்புகிறீர்கள்?

உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் அழகுப் பெண்களிடம் கேட்கப்பட்ட சில அதிரடி கேள்விகள்தான் இவை. உலக அழகிப் போட்டி வெறும் உடல் அழகிற்கானது மட்டுமல்ல என்பதை விளக்குகிறது இந்த கேள்விகள். அவர்களது புத்திசாலித்தனம், பண்புகள், சேவை மனப்பான்மை போன்ற அம்சங்களை சோதிப்பதற்காக இத்தகைய அதிரடி கேள்விகள் கேட்கப்படும். அதற்கு நழுவிக் கொள்ளாமலும், சரியாகவும், சாதுரியமாகவும் பதில் சொல்பவர்களே அழகி பட்டம் வெல்கிறார்கள்.

இதுவரை நடந்த உலக அழகிப்போட்டிகளில் கேட்கப்பட்ட முக்கியமான சில கேள்விகளையும், அதற்கு அழகிகள் சொல்லிய அழகிய பதிலையும் படியுங்கள்.

நீங்கள் செய்த எந்தக் காரியத்தை மீண்டும் செய்யக்கூடாது என நினைக்கிறீர்கள்?

(அமெரிக்க அழகி ஒலிவியாவிடம், 2012-ம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் இந்த கேள்வி கேட்கப்பட்டது)

என் எல்லா அனுபவங்களையும் மற்றவர்களுக்குச் சொல்லிவிடுகிறேன். அது நல்லதோ, கெட்டதோ, அவர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன். ஆனால் அதற்காக பின்னர் வருந்துவேன். நமக்கு இளையவர்களாக இருந்தாலும், உடன்பிறப்புகளாக இருந்தாலும் அவர்கள் அதை (நம் கருத்துகளை) ஏற்றுக் கொள்வார்கள் என நினைப்பதைவிட, அவர்களை அவர்களின் வழியில் ஊக்குவிப்பதே சிறந்தது என பின்னர் நினைக்க வைத்துவிடுகிறது.. அதனால் மற்றவர்களுக்கு நாம் எந்த அறிவுரையும் சொல்ல வேண்டியதில்லை. அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள்.

உங்கள் உடலில் ஏதாவது ஒரு உறுப்பை மாற்ற விரும்பினால், எதை மாற்றுவீர்கள், அது ஏன்?

(அங்கோலா நாட்டு அழகி லெய்லா லோபஸிடம், 2011-ல் கேட்கப்பட்ட கேள்வி இது)

கடவுள் என்னை திறம்பட வடிவமைத்திருக்கிறார் என்றே நம்புகிறேன். அதற்காக நன்றி கூறுகிறேன். அதனால் நான் எந்த ஒன்றையும் மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. என்னை நானே (உடல் அழகைவிட) உள்மன அழகுடன் ஒப்பிட்டுப் பார்ப்பேன். நான் என் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து சிறந்த பண்புகளையே பெற்றிருக்கிறேன். இதையே வாழ்நாள் முழுவதும் பின்பற்ற விரும்புகிறேன். மற்றவர்களை மதிக்கும் பண்பே அனைத்திலும் சிறந்தது, அதையே அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

(இந்தப் பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து அவருக்கு அந்த ஆண்டில் அழகிப் பட்டம் தந்தது என்பது நினைவூட்டத்தக்கது)

பெண்ணின் சிறப்பம்சங்கள் என்ன?

(இந்திய அழகி சுஷ்மிதாசென்னிடம் 1994-ல் கேட்கப்பட்ட கேள்வி இது)

பெண்ணாக இருப்பது கடவுளின் பரிசு. அதை அனைவரும் உணர வேண்டும். பெண்ணின் வழியே உயிர்கள் தோன்றுகின்றன. அது ஆணாக இருந்தாலும் தாயானவள் அக்கறையுடன் அன்பு செலுத்துவாள். நேசிப்பாள். அதுவே பெண்மையின் சிறப்பு.

வேற்றுக்கிரகவாசி ஒருவர் உங்கள் முன்பு இறங்கிவிட்டால், அவரை மகிழ்ச்சியுடன் உபசரிப்பீர்களா?

(1969-ல், பிலிப்பைன்ஸ் உலக அழகி குளோரியா டியாஸிடம் கேட்கப்பட்ட கேள்வி இது.)

அவன் நிலவு மனிதனாக இருந்தால், நீண்ட காலம் நிலவில் வசித்து ஒரு மாறுதலுக்காக இங்கே வந்திருக்கலாம். அவன் விருப்பப்படி இருக்கட்டும் என நினைப்பேன். இடையூறு செய்ய மாட்டேன்.

இனிவரும் கேள்விகள் அனைத்தும் கடந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் கேட்கப்பட்டவை:

எந்தத் தொழில் அதிக சம்பளத்திற்கு தகுதியானது, அது ஏன்?

(இந்திய அழகி மனுஷி சில்லரிடம் கேட்கப்பட்ட கேள்வி இது)

தாய்க்குத்தான் மிக உயரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். நான் பணத்தைப்பற்றி பெரிதாக சிந்திப்பதில்லை. அன்ைபயும், நேசிப்பையும்தான் ஒருவருக்கு நாம் கொடுக்கும் அதிகபட்ச ஊதியமாக நினைக்கிறேன். அந்த அதிகபட்ச மரியாதை தாய்க்குத்தான் கிடைக்க வேண்டும். தாயே குழந்தைகளின் வளர்ச்சிக்காக தன்னையே தியாகம் செய்கிறாள். எனவே தாய்க்குத்தான் அதிக ஊதியமும், மதிப்பும் கிடைக்க வேண்டும்.

(இது சிறந்த பதிலாக தேர்வு செய்யப்பட்டு, உலக அழகிப்பட்டத்தை இவருக்குப் பெற்றுத்தந்தது குறிப் பிடத்தக்கது)

உலக அழகி எந்த பண்பை முக்கியமாக கொண்டிருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள்?

(மெக்சிகோ அழகி ஆண்ட்ரியா மீஸாவிடம் கேட்கப்பட்ட கேள்வி இது)

அது அன்புதான். அதுதான் அகிலத்தை அரவணைக்கும் ஒரே பண்பு. உலக அழகியிடமும் அது இருக்க வேண்டும்.

உலகத் தலைவர்கள் முன்பு உங்களை பேச வைத்தால், நீங்கள் எதைப் பற்றி பேசுவீர்கள்?

(இங்கிலாந்து அழகி ஸ்டெபான் ஹில்லிடம் கேட்கப்பட்ட கேள்வி இது).

எனக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால், மருத்துவ துறையில் உலக நாடுகள் இடையே இருக்கும் முரண்பாடுகள் பற்றி பேசுவேன். மருந்துகள், தடுப்பு மருந்துகள் கிடைப்பதில் உலக நாடுகளிடையே காணப்படும் முரண்பாடுகளை களைந்து அனைவருக்கும் ஆரோக்கியம் கிடைக்க தீர்வு காண்பது பற்றி பேசுவேன்.

மேலும் செய்திகள்