திருப்பூரில் பா.ஜனதா பிரமுகர் வீட்டிற்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு

திருப்பூரில் பா.ஜனதா பிரமுகர் வீட்டிற்கு வந்த மர்ம பார்சலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-10 00:00 GMT

திருப்பூர்,

திருப்பூர் முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 60). இவர் பா.ஜனதாவின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்றுகாலை நாச்சிமுத்து வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த ஒருவர் நாச்சிமுத்து கொடுக்க சொன்னதாக ஒரு பார்சலை கொடுத்து விட்டு, ஓட்டம் பிடித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் இது குறித்து நாச்சிமுத்துவை செல்போனில் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அவர் தான் எதும் கொடுத்து விடவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மர்ம பார்சல் குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பார்சலை கொடுத்தது திருப்பூர் சஞ்சய்நகரை சேர்ந்த ரத்தினசபாபதி (49) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சாமி தனது கனவில் வந்து புதிய பேண்ட், சட்டை துணிகள், செருப்பு, சாமி படங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி அதனை நாச்சிமுத்து வீட்டில் கொடுத்தால், நல்லது நடக்கும் என தெரிவித்ததாகவும், அதனால் அந்த பார்சலை கொண்டு அவரது வீட்டில் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் தான் ரத்தினசபாபதி மனநிலை பாதித்தவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரத்தின சபாபதியை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்