வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் - கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாமை கலெக்டர் பிரபாகர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2018-09-09 23:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைகல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்கும் பொருட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட பின் விண்ணப்பங்கள் படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மாவட்டத்திலுள்ள 1,850 வாக்கு சாவடி மையங்களிலும் படிவங்கள் பெறும் முகாம் நடைபெறுகிறது.

1.1.2019-ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்கும் பொருட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தமானது நடைபெறுகிறது. இதில் வருகிற 31.10.2018 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாறுதல் செய்யப்பட்ட பின் விண்ணப்பங்கள் படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் படிவங்கள் பெறப்பட உள்ளது. வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.

வாக்காளர் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் 23.9.2018, 7.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் 1,850 வாக்கு சாவடி மையங்களிலும் நடக்கிறது. அன்றைய தினம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாறுதல் ஆகியவற்றிற்கான படிவங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த படிவங்களை மேற்கண்ட தேதிகளில் அந்தந்த வாக்கு சாவடி மையங்களில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்