சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்

ஓசூரில் வடக்கு சரக அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.

Update: 2018-09-09 23:30 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓசூர் வடக்கு சரக அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். இந்த போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில், 700 மாணவர்கள், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். பின்னர், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள், கேடயங்களை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:- தற்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டேபிள் டென்னிஸ் அகடமி, சிலம்பு பயிற்சி அகடமி போன்றவற்றை ஏற்படுத்தியதன் விளைவாக, ஆசிய விளையாட்டில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச போட்டிகளில் 152 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். அவர்களுக்கு ரூ.17.2 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

அதேபோல், பயிற்சியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் 15 பேர் கலந்து கொண்டு 21 பதக்கங்களை பெற்றுள்ளனர். கிராமப்புற விளையாட்டு போட்டிகள் நடைபெற ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு, விளையாட்டு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில், ஓசூர் அந்திவாடி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்துவதற்காக தற்போது ரூ.3.50 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்தும் வகையில், பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட கல்வி ஆய்வாளர் ஜெயராமன், உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, ஓசூர் தாசில்தார் முத்துப்பாண்டி, சூளகிரி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், ஓசூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் அசோகா, நாராயணரெட்டி, பாகலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்