ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களை பெற்ற வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களை பெற்ற அவினாசி வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2018-09-09 23:45 GMT

திருப்பூர்,

ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் ஜகர்தா மற்றும் பாலம்பேங் நகரங்களில் நடந்தது. இந்த போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதல் மற்றும் 4x400 தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர் தருண் (வயது 21) கலந்துகொண்டு 2 வெள்ளி பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தார். இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ராவுத்தம்பாளையத்தை சேர்ந்தவர். தருணின் தந்தை அய்யாசாமி. தருண் 4–ம் வகுப்பு படிக்கும் போது இறந்து விட்டார். தாயார் பூங்கொடி (46). இவர் கணியாம்பூண்டி அருகே உள்ள மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

தருணின் தங்கை சத்தியா (19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். தருண் 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை தனது தாயார் வேலை செய்து வரும் பள்ளியிலும், 11 மற்றும் 12–ம் வகுப்பு திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள செஞ்சுரி மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் படித்தார். தற்போது மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.

பள்ளியில் படிக்கும் போதே தடகள வீரராக உருவாகிய தருண் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு பதங்கங்களை வென்றுள்ளார். மேலும், பிளஸ்–2 படிக்கும் போது தெற்கு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்த அவினாசி வீரர் தருண் இந்தோனேசியாவில் இருந்து சென்னை வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ரெயில் மூலம் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். சொந்த ஊருக்கு ரெயிலில் வந்து இறங்கிய அவரை, அவரது தாயார் பூங்கொடி, தங்கை சத்தியா மற்றும் குடும்பத்தினர், பயிற்சியாளர் அழகேசன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கை தட்டியும், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் பலர் தருணை தூக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன் பின்னர் அங்கிருந்து ராவுத்தம்பாளையத்திற்கு காரில் தருண் புறப்பட்டு சென்றார்.

இதன் பின்னர் காலை 10.30 மணி அளவில் அவினாசி, ராவுத்தம்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் நல்லது நண்பர்கள் அறக்கட்டளையினர் சார்பில், அவினாசி பஸ் நிலையத்தில் தருணுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த தருணுக்கு மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், பள்ளி மாணவ–மாணவிகளின் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு கொடுத்து, மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தருணுக்கு, வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து பாராட்டினர். மேலும், பலர் மாலையும் அணிவித்தனர்.

அவினாசி பஸ் நிலையத்திற்கு தருண் வந்ததும், அவரை பின் தொடர்ந்து வந்த பொதுமக்கள் பலரும் தருணுடன் ‘செல்பி’ எடுக்க முயற்சி செய்தனர். இதை அறிந்த தருண் செல்பி எடுப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களுடன் புன்னைகையோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதன் பின்னர் அவினாசி பஸ் நிலையத்தில் இருந்து வாகனத்தில் தருண் அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு மேளம், தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது வழியெங்கும் பொதுமக்கள் பலர் தருணுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தருணை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றதும் அங்கு கோவில் நிர்வாகம் சார்பில் தருணுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கோவிலுக்குள்ளே சென்றதும், அவருக்கு பரிவட்டமும் கட்டி மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் தருண் பல வெற்றிகள் பெற வேண்டும் என அவரது பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோவிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு, தருண் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் புறப்பட்டு சென்றார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் தருண் குறித்து கேட்டறிந்து அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கங்களை வென்று சொந்த ஊர் வந்த தருணுக்கு அவினாசி பஸ் நிலையத்தில் பலரும் சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவினாசியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் முகமது சுல்தான் என்பவர் தருணுக்கு வாழ்த்து தெரிவித்து, ½ பவுன் மோதிரத்தை பரிசாக அளித்து, அவரது விரலில் அணிவித்தார். தொடர்ந்து மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என தருணுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்