காங்கிரஸ் கூட்டணியால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் - முதல் அமைச்சர் நாராயணசாமி

காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-09-10 00:00 GMT

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

கடந்த 2001–ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. அதனை கண்டித்து போராட்டம் நடத்த சோனியாகாந்தி கட்டளையிட்டார். அதன்படி போராட்டங்கள் நடத்தி மக்களை காங்கிரஸ் கட்சியின் பக்கம் திருப்பினோம். மீண்டும் அந்த நிலை வந்துள்ளது.

நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நமது குறிக்கோள் ராகுல்காந்தி பிரதமர் ஆகவேண்டும் என்பதுதான். அதற்காக அனைவரும் பாடுபடவேண்டும். நாட்டின் வளர்ச்சி தற்போது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால்தான் முடியும்.

காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 160 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.60 ஆகவும், டீசல் ரூ.55 ஆகவும் இருந்துது. ஆனால் இப்போது கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 95 டாலர்தான். ஆனால் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.85 ஆகவும், டீசல் விலை ரூ.80 ஆகவும் உள்ளது. நம்முடைய மாநிலத்தில் வாட் வரியை குறைத்து விதிப்பதால் இதில் விலை வித்தியாசம் உள்ளது.

வெளிநாட்டில் இருந்த கச்சா எண்ணெயை கொண்டுவந்து அதனை சுத்திகரித்து வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர். அதன்விலை லிட்டருக்கு ரூ.34 மட்டுமே. ஆனால் நமது நாட்டில் மட்டும் அதிக விலைக்கு விற்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பாரதீய ஜனதாவுக்கு ஓட்டுபோட்டதற்காக மக்களுக்கு கொடுக்கப்படும் பரிசுதான் இந்த விலை உயர்வு. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் மத்திய அரசுக்கு 4 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. அந்த பணம் எங்கு போனது? இதற்காக வருகிற தேர்தலில் மோடி, அமித்ஷா மட்டுமல்லாது பாரதீய ஜனதாவையே வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அ.தி.மு.க.வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. இதில் முதல்–அமைச்சர், அமைச்சர்களாகிய நாங்கள் நேரடியாக கலந்துகொள்ள முடியாது. நீங்கள் கூறினால் கலந்துகொள்வோம். எங்களுக்கு பதவி முக்கியமில்லை.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

மேலும் செய்திகள்