வருகிற கல்வி ஆண்டில் 600 அரசு பள்ளிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ‘அடல் லேப் திட்டம்’ தொடங்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

வருகிற கல்வி ஆண்டில் 600 அரசு பள்ளிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ‘அடல் லேப் திட்டம்’ தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2018-09-09 23:00 GMT

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரி சார்பில் பெண் குழந்தை பாதுகாப்பிற்கான மராத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. கல்லூழி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருப்பூர் சத்தியபாமா எம்.பி. கல்லூரி முதல்வர் ஜெகதாலட்சுமணன், செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மராத்தான் போட்டியில் ஆண்கள், சிறுவர்கள், பெண்கள், சிறுமிகள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஓடினார்கள்.

முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மராத்தான் போட்டிகள் மூலம் மாணவ, மாணவிகள் தங்களது உடலலையும், மனதையும் வலிமைபடுத்திக் கொள்ள முடியும். மேலும், ஒழுக்கத்தையும், பண்பையும் வளர்த்துக் கொள்ளலாம். சிறந்த கல்வியாளராக உருவாக முடியும். சமூக சேவை நிறுவனங்களின் சார்பில் 20 அரசு பள்ளிகளில் முதற்கட்டமாக வாகனம் மூலம் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணிகள் ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்படும்.

வருகிற கல்வி ஆண்டில் 600 அரசு பள்ளிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ‘அடல் லேப் திட்டம்’ தொடங்கப்படும். இந்தியாவிலேயே தமிழகம் கல்வித்துறையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் கியூஆர் கோடு மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்த தொடங்கி உள்ளனர். மேலும் பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் தங்களுடைய செல்போனில் வாட்ஸ்–அப் பார்த்துக்கொண்டு இருப்பதாக தகவல் வந்து உள்ளது. ஆனால் புகார்கள் எதுவும் வரவில்லை. ஆசிரியர்கள் வாட்ஸ்–அப் பயன்படுத்துவது குறித்து புகார்கள் தெரிவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபி அருகே உள்ள எலத்தூர் அரசு பள்ளியில் மாணவர்களைக் கொண்டு பள்ளியை சுத்தம் செய்த சம்பவம் நடந்தது. இதேபோல் தாராபுரத்திலும் ஒரு பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி அரசு பள்ளியில் நடந்தால், கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். எலத்தூரில் நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியர் சில தினங்களில் இடமாற்றம் செய்யப்படுவார்.

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கல்வித்துறை பல்வேறு மாற்றங்களைப் பெற்று வளர்ச்சியடைந்து வருகிறது. மாணவ– மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் உடனடியாக கிடைக்க போக்குவரத்து அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

மேலும் செய்திகள்