கொலையாளிகளை பிடிக்க வந்த ஆந்திர போலீசாரை சிறைபிடித்து மலைவாழ் மக்கள் போராட்டம்

ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டியபோது ஏற்பட்ட மோதலில் வனத்துறை அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கொலையாளிகளை பிடிக்க வந்த ஆந்திர போலீசாரை சிறை பிடித்து மலைவாழ் மக்கள் போராட்டம் நடத்தினர். கச்சிராயப்பாளையம் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-09-09 21:30 GMT
கச்சிராயப்பாளையம், 


ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செம்மரம் வெட்டியபோது வனத்துறையினருக்கும், செம்மரம் வெட்டிய கும்பலை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வனத்துறை அதிகாரி அசோக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த 2 செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 2 செல்போன் எண்களும் விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலை பகுதியை சேர்ந்தவர்களுக்கு உரியது என்பது தெரியவந்தது.

இதையடுத்து கடப்பா துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு தலைமையிலான தனிப்படை போலீசார் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்வராயன்மலை பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வந்தனர். இதில் வனத்துறை அதிகாரி கொலை சம்பவத்தில் கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு தலைமையிலான போலீசார் பதிவெண் இல்லாத 3 கார்களில் மாறுவேடத்தில் கல்வராயன்மலையில் உள்ள ஆலத்தி கிராமத்துக்கு சென்றனர். அப்போது அங்கு வீட்டில் இருந்த சின்னதம்பி மகன் சகாதேவன்(வயது 27) என்பவரை போலீசார் பிடித்து ஒரு காரில் ஏற்றினர். பின்னர் சகாதேவனுடன் அருகில் உள்ள மொட்டையனூருக்கு சென்ற போலீசார் அங்கிருந்த அண்ணாமலை மகன் சடையன்(30), வெள்ளி மகன் கோவிந்தன்(27) ஆகிய 2 பேரையும் பிடித்தனர். பின்னர் 3 பேரையும் கரியாலூர் போலீஸ் நிலையத்துக்கு காரில் அழைத்து செல்ல முயன்றனர்.

இதுபற்றி அறிந்த மலைவாழ் மக்கள் மொட்டையனூர் பாலம் அருகே திரண்டு வந்து போலீசாரின் வாகனங்கள் செல்லாதவாறு சாலையில் கற்களை போட்டனர். அப்போது அந்த வழியாக வந்த போலீசாரின் கார்களை மறித்து, அவர்களை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மலைவாழ் மக்கள், நீங்கள் போலீஸ் என்பதற்கு என்ன ஆதாரம், ஏன் அவர்களை பிடித்து செல்கிறீர்கள் என்று கேட்டனர். இந்த நிலையில் காரில் இருந்த சடையன், சகாதேவன் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜா, மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மலைவாழ் மக்களிடம் இருந்து ஆந்திர போலீசாரை மீட்டனர். பின்னர் கோவிந்தனை மட்டும் ஆந்திர மாநிலம் அழைத்து சென்றனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்