மாவட்ட செய்திகள்
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் அன்புசெல்வன் பரிசு வழங்கினார்.
கடலூர், 

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கை கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் மக்கள் தொகை 135 கோடி என்பது ஒரு சவாலாக உள்ளது. அந்த சவாலை நாம் ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் சேவையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இந்த கருத்தரங்கின் நோக்கம், சிறுகுடும்ப நெறியை கடைபிடித்து மக்கள் தொகையை அதிகரிக்காத வண்ணம் குடும்ப நல முறைகளை ஏற்று முறையாக பின்பற்றிடவும், மற்றவர்களுக்கு இவற்றை கொண்டு சேர்த்திடவும் நடத்தப்படுகிறது. இந்தியாவிலேயே சுகாதாரத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு பெண் குழந்தைகளை காப்போம் திட்டத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் பேசினார்.

தொடர்ந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு, கவிதை போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் அன்புசெல்வன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

கருத்தரங்கில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் வசந்தி வரவேற்றார். குடும்ப நலத்துறை துணை இயக்குனர் கலா திட்ட விளக்க உரையாற்றினார். இதில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹபிசா, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சாய்லீலா, செயல் அலுவலர் பரிமேல்அழகர், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் ஆறுமுகம், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் மகேஸ்வரி, குழந்தைகள் நல டாக்டர் குமார், இளநிலை நிர்வாக அலுவலர் மீராபாய் உள்பட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு மரக்கன்று வழங்கியதோடு, பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.