கர்நாடகத்தில் இன்று பஸ்-ஆட்டோக்கள் ஓடாது : பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) நாடுதழுவிய முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-09 23:20 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் இன்று பஸ்-ஆட்டோக்கள் ஓடாது என்று கூறப்படுகிறது. மேலும் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டு வந்தது.

இத்தனை நாட் களுக்கு ஒரு முறை அதன் விலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை.

அந்த நிலையை மாற்றி 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோலிய பொருட்களின் விலை மாற்றி அமைக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னாளில் மீண்டும் அந்த நிலை மாறி, பெட்ரோல்-டீசலின் விலையை தினமும் மாற்றி அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ெபட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல் விலை அடுத்த ஓரிரு மாதங்களில் 100 ரூபாயை தொடும் என்று சொல்கிறார்கள்.

பெட்ரோலிய பொருட் களின் இந்த விலை உயர்வு சாமானிய, நடுத்தர மக்களை வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது. இந்த விலை உயர்வு நாடு முழுவதும் மக்களிடையே கடும் ஆக்ரோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விலை உயர்ந்து வந்தாலும், பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடம் இல்ைல என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ந் தேதி(இன்று) நாடுதழுவிய முழுஅடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்த நாடுதழுவிய முழுஅடைப்புக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. கம்யூனிஸ்டு கட்சிகளும் இதை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

முழுஅடைப்பையொட்டி கர்நாடகத்தில் இன்று(திங்கட்கிழமை) சுமார் 23 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடாது. இதில் பெங்களூருவில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பி.எம்.டி.சி. பஸ்கள் சாலையில் இறங்காது.தனியார் பஸ்களும் தனது சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளன. ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், டாக்சி ஓட்டுனர்கள் சங்கம், ஓலா, உபர் வாடகை கார் சேைவ சங்கங்களின் ஊழியர்களும் முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடாது. வங்கி ஊழியர்கள் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இன்று வங்கிகள் திறக்கப்பட்டாலும், ஊழியர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

கர்நாடகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்படாது என்று அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும். ஆனால் ஊழியர்கள் பணிக்கு வருவது மிக குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பெங்களூருவில் வணிக வளாகங்கள் திறக்கப்படாது. திரையரங்குகள் மூடப்படுகின்றன. கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகளும் செயல்படாது என்று கூறப்படுகிறது. பெங்களூருவில் மெட்ரோ ரெயில்களும் ஓடாது என்று சொல்லப்படுகிறது. ஆயினும் மெட்ரோ ரெயில் நிர்வாகம், பயணிகள் வந்தால் ரெயிலை இயக்குவதாக கூறி இருக்கிறது.

பெரும்பாலான தனியார் நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறையை வழங்கி இருக்கிறது. அதே நேரத்தில் அத்தியாவசிய தேவையான மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் எப்போதும் போல் இயங்கும். பால் விநியோகத்திலும் எந்த பாதிப்பும் இருக்காது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கும்.

இந்த முழு அடைப்பின்போது, பெங்களூருவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் செய்துள்ளார். அதே போல் மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்