விநாயகர் சிலைகள் விற்பனை மந்தம் தொழிலாளர்கள் வேதனை

தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனை மந்தமாகி உள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2018-09-10 00:02 GMT
தென்காசி, 


நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ரசாயன கலவையினால் செய்யப்படும் சிலைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மண்ணால் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் மண்பாண்ட தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் மண் பானை, குடம், அடுப்பு உள்பட பல்வேறு பொருட்களை செய்து வருகின்றனர். இவை தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழா சமயத்தில் இந்த தொழிலாளர்கள் மற்ற பொருட்களை தயார் செய்வதை நிறுத்திவிட்டு விநாயகர் சிலைகளை மட்டுமே தயார் செய்கிறார்கள்

இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வாங்கி செல்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர். அதாவது, வருவாய் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, மின்வாரிய துறை உள்பட பல்வேறு துறைகளின் அனுமதி பெற்ற பிறகு தான் விநாயகர் சிலைகளை வாங்கி தாங்கள் விரும்பும் இடங்களில் வைக்க வேண்டும். ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தென்காசி பகுதியில் கடந்த ஆண்டு சுமார் 300 வரை விற்பனையான சிலைகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு ஒரு சிலை கூட விற்பனை ஆகாமல் உள்ளது.

இதுகுறித்து இலஞ்சியை சேர்ந்த தொழிலாளர்கள் கூறியதாவது:-

நாங்கள் பல ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் மட்டுமே செய்வதில் ஈடுபடுவோம். 1 அடி முதல் 6 அடி உயரம் வரை இந்த சிலைகளை களிமண் மற்றும் வண்டல் மண்ணை சேர்த்து செய்கிறோம். ஒரு சிலை ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையாகும். தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமல்லாமல் கேரளாவிற்கும் இந்த சிலைகள் ஏற்றுமதியாகும். இந்த ஆண்டு அதிகாரிகளின் கட்டுப்பாடுகளால் விற்பனை மிகவும் மந்தமாகியுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

எங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் இந்த தொழிலை மேம்படுத்த கட்டுப்பாடுகளை தளர்த்தி எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

செங்கோட்டை மண்பாண்ட கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் கூறுகையில், இந்த ஆண்டு பல்வேறு வகையான வடிவத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் வேலைக்கு ஏற்றபடி தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைப்பதில்லை. மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலைப்பாடுகள் இருந்தபோதிலும் இப்பணிகளை இறை பணியாக நினைத்து ஆண்டாண்டு காலமாக செய்து வருகிறோம் என்றார்.

செங்கோட்டை அருகே காலாங்கரை கிராமத்தில் உள்ள பொம்மைகள் தயாரிப்பு நிலைய உரிமையாளர் திருமலை என்பவர் கூறுகையில், நாங்கள் தயாரிக்கும் அதிகமான விநாயகர் சிலைகளை கேரளாவை சேர்ந்தவர்கள் முன் பணம் கொடுத்து பதிவு செய்து வாங்கிச் செல்வார்கள். அவ்வாறு முன் பணம் கொடுத்தவர்கள், கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் சேதங்கள் அதிகமாகி, பெரிய அளவில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடததால் விநாயகர் சிலைகளை வாங்க வரவில்லை. இதனால் பல லட்சம் மதிப்புள்ள விநாயகர் சிலைகள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் தற்போது அதிகாரிகளின் கெடுபிடியால் விற்பனை மந்தமாகி தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்