நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மாவட்ட நீதிபதி ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மாவட்ட நீதிபதி ராஜசேகர் ஆய்வு நடத்தினார்.

Update: 2018-09-10 00:07 GMT
சங்கரன்கோவில், 

மதுரை ஐகோர்ட்டு வழிகாட்டுதலின் படி அந்தந்த மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோவில்களில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதனடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் மாவட்ட நீதிபதி ராஜசேகர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். குற்றாலம் குற்றாலநாதர், பண்பொழி திருமலைக்குமார சுவாமி, தென்காசி காசிவிஸ்வநாதர் ஆகிய கோவில்களில் ஆய்வு செய்தார். பின்னர் அவர், சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலையும் ஆய்வு செய்தார்.

கோவில் பிரகாரம், சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாள், சங்கர நாராயணர், நடராஜர் சன்னதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்களிடமும் அவர்களுக்கான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் மாவட்ட நீதிபதி ராஜசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் ஆய்வு செய்த கோவில்களில் பெரும்பாலும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆய்வு செய்தபோது, காற்றோட்டமாக இருப்பதற்கு சில வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், கூடுதலாக வசதிகள் செய்யப்பட வேண்டும். முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்ய அவதிப்படுவதால் அவர்களுக்கு தனியாக வரிசை அமைத்து இலவச தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின்போது கோவில் துணை ஆணையர் செல்லத்துரை உள்பட கோவில் பணியாளர்கள் உடன் சென்றனர். 

மேலும் செய்திகள்