கடலில் கலக்கும் ஆற்றுநீர் வீணாகிறதா?

காவிரியாக இருந்தாலும் சரி, தாமிரபரணியாக இருந்தாலும் சரி ஆண்டுதோறும் நமக்கு தேவையான நீரை தருவதில்லை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறையே போதுமான நீரை கொண்டு வருகிறது.

Update: 2018-09-10 02:30 GMT
ஒருசில ஆண்டுகளில் தேவைக்கு அதிகமான தண்ணீர் இந்த ஆறுகளில் பாய்கிறது.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், 2 ஆறுகளிலும் அதிகமான தண்ணீர் பாய்ந்தது. இதனால் அணைகளும் நிரம்பி உபரிநீர் கடலில் கலந்தது. மேட்டூர் அணையின் கொள்ளளவைவிட அதிகமான தண்ணீர் காவிரி ஆற்றில் பாய்ந்து கடலில் கலந்தது.

இப்படி கடலில் கலப்பதால் ஆற்று நீர் வீணாகிறது என்ற பேச்சும் அதிகமாக எழுந்தது. இப்படி கடலுக்கு செல்லும் நீரை தடுக்கவும், வீணாகும் இந்த தண்ணீரை சேமிக்கவும் அணைகள், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.

காவிரி மேலாண்மை வாரியம் இருப்பதால் அணைகள் கட்ட முடியுமா? சமதளமான நமது எல்லையில் பெரிய அணைகள் கட்டுவதற்கு வாய்ப்புள்ள இடங்கள் இருக்கிறதா? என்ற ஐயப்பாடுகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். காவிரி, தாமிரபரணி மட்டும் அல்ல எந்த ஆற்று தண்ணீரும் கடலில் கலப்பதால் வீணாகிவிடுகிறதா? என்பதை பார்க்கலாம்.

இயற்கை என்பது மனிதனுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கை தனக்காகவே எல்லாவற்றையும் உருவாக்கிக் கொண்டது. அந்த இயற்கையை அதன் தன்மை மாறாமல் நாம் பயன்படுத்திக் கொள்வது தான் சிறந்த வழி. அதுதான் சரியான போக்கும் கூட. தேவைக்கு அதிகமாக இயற்கையை நாம் உபயோகிப்பது தவறே.

அந்த வகையில், தேவைக்கு அதிகமாக இயற்கையாய் ஓடும் ஆற்றை தடுக்கும் விதமாக கூடுதல் அணைகளை கட்டுவதால் சில நேரங்களில் பேரிடர்களையும் சந்திக்க நேரிடும். கனமழை பெய்துகொண்டு இருக்கும்போதே அணைகளும் நிரம்பி தண்ணீர் அதிகளவு வெளியேற்றப்பட்டால் நாம் தான் பேரழிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம்.

2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, கேரளாவின் சமீபத்திய வெள்ள துயரம், கொள்ளிடம் பழைய இரும்பு பாலம் தகர்ந்து விழுந்தது, முக்கொம்பு அணை மதகுகளை வெள்ளம் அடித்துச்சென்றது எல்லாம் இதற்கு உதாரணம்.

ஆற்று நீரை கொஞ்சம் கூட கடலில் கலக்கவிடாமல் நமது பயன்பாட்டுக்காக முற்றிலுமாக தடுத்தால் என்னவெல்லாம் நிகழும் என்பது பற்றி பல ஆராய்ச்சிகள் கூறியுள்ளன.

குறிப்பாக, கடல் சுற்றுச்சூழலுக்கு பெரிய சேதம் ஏற்படும். பல்லுயிர் பெருக்கம் தடைபடும். ஆற்று நீர் கடலில் கலக்கும் பகுதியை சார்ந்துள்ள மீன் இனங்கள் அழியும்.

உதாரணத்துக்கு சால்மன் மீன்களை சொல்லலாம். இந்த வகை மீன்கள் கடலில் வாழ்ந்தாலும், இனப்பெருக்க காலங்களில் ஆறுகளுக்கு இடம்பெயரும். அதன் பிறகு மீண்டும் அவை கடலுக்கு திரும்பும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஆற்று நீர் கடலில் கலக்கும் வாய்ப்பை நாம் வழங்க மறுத்தால், அந்த மீன்களின் இனப்பெருக்கம் தடைபடும்தானே. இது அந்த மீன் இனத்துக்கு அழிவு பாதையை வகுத்து கொடுக்கும் அல்லவா. அதிர்ஷ்டவசமாக இந்த மீன் இனம் இந்தியாவில் இல்லை என்பது வேறு கதை.

இதே போல, ஆற்று நீர் கடலில் கலக்காவிட்டால், கடல்நீரின் உப்புத்தன்மை அதிகரிக்கும். ஆறுகளை நம்பி உள்ள சில பறவை இனங்களும் அழிந்துவிடும்.

ஆற்று நீர் கடலில் கலக்காவிட்டால் நிலப்பகுதியில் உள்ள உப்பு, கூடுதலான நுண்ணூட்டச்சத்துகள் போன்றவை கடலுக்கு அடித்துச்செல்லப்படாது. அந்த நுண்ணூட்டச்சத்துகளை நம்பி கடலில் பல உயிரினங்கள் உள்ளன. எனவே அவை அழிய நேரிடும்.

இவை எல்லாவற்றையும்விட இது நிலப்பகுதிக்கும் பேராபத்தாக முடியும். சில ஆண்டுகளுக்கு இப்படியே ஆறுகள் தடுக்கப்பட்டுவிட்டால் நிலப்பகுதியில் உப்புத்தன்மையும், அமிலத்தன்மையும் அதிகரிக்கும்.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய முர்ரே ஏரியின் தண்ணீர் கடலில் கலக்கும் கூராங் பகுதியில் பிரபலமான சதுப்புநிலப் பகுதி உள்ளது. சில ஆண்டுகளாக இந்த ஏரி நீர் கடலுக்கு செல்வது தடுக்கப்பட்டு இருந்தது. இதன்காரணமாக அந்த கூராங் சதுப்பு நிலப்பகுதி கடலைவிட 5 மடங்கு உப்புத்தன்மையை அடைந்துவிட்டது.

அதன்பின்னரே அந்நாடு விழித்துக்கொண்டு கூராங் திட்டத்தை கைவிட்டு, வழக்கம்போல ஏரி நீர் கடலுக்கு செல்வதை அனுமதித்தது. குடிநீருக்காக கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டங்களை தொடங்கியது. ஆற்று நீர் கடலில் கலப்பதை தடுப்பதால் ஏற்படும் இழப்பைவிட, கடல்நீரை சுத்திகரித்து எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவு என்று கருதப்படுகிறது.

அப்படிப் பார்த்தால் காவிரி ஆற்றின் முகத்துவாரப்பகுதிகள் அனைத்தும் டெல்டா மாவட்டங்களில் உள்ளது. உப்புத்தன்மையும், அமிலத்தன்மையும் அதிகரித்தால் அங்குள்ள விவசாய நிலங்கள் என்னவாகும்? என்பது விவசாயிகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

எனவே ஆற்று நீர் கடலில் கலப்பது எப்போதும் வீணாகிவிடாது. இயற்கையில் வீணானது என்று எதுவும் இல்லை. இயற்கை சக்திக்கு மிஞ்சியதும் எதுவும் இல்லை. அந்த சக்தியை தடுக்காமல் நமது தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது தான் உகந்தது.

-ஒளி

மேலும் செய்திகள்