கொள்ளிடம் அணை உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பாறாங்கற்களுக்கு இடையே சீறிப்பாயும் தண்ணீர்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்த பகுதியில் தடுப்பு ஏற்படுத்தப்பட்ட பாறாங்கற்களுக்கு இடையே தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. நீருக்குள் மூழ்கி உயிரை பணயம் வைத்து தொழிலாளர்கள் அதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Update: 2018-09-10 00:44 GMT
திருச்சி,

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் என உடைந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் 120 மீட்டர் நீளத்திற்கு இடைவெளி ஏற்பட்டு அதன் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறியது. இப்படி வீணாக வெளியேறும் தண்ணீரை தடுத்து நிறுத்துவதற்கான தற்காலிக சீரமைப்பு பணிகள் ரூ.95 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உடனடியாக தொடங்கின. சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

அணை உடைந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்றிற்குள் முதலில் லாரிகள், பொக்லைன் எந்திரங்கள் இறங்கி வேலை செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் அந்த பகுதியில் பாறாங்கற்கள் லாரி, லாரியாக கொண்டு வந்து கொட்டப்பட்டன. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருப்பதால் மிகவும் நீளமான சவுக்கு கம்புகள் ஆற்றுக்குள் ஊன்றப்பட்டன. பின்னர் சுமார் 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. இவற்றின் மூலம் வெளியேறி செல்லும் தண்ணீரின் வேகம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த 7-ந்தேதி இரவு அணையில் உடைப்பு ஏற்பட்ட 120 மீட்டர் நீளத்திற்கும் பாறாங்கற்களால் ஆன தடுப்புகள் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனை பார்வையிட்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உடைந்த பகுதி வழியாக தண்ணீர் வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது. மணல் மூட்டைகள், பாறாங்கற்கள் வழியாக நீர் கசிந்து வெளியேறுவது ஓரிரு நாளில் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டு விடும் என நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

‘மழை விட்டாலும் தூவானம் நின்றபாடில்லை’ என கிராமப்புறங்களில் சொல்லப்படும் பழமொழியை நினைவு படுத்தும் வகையில் தான் கொள்ளிடம் அணையின் தற்காலிக சீரமைப்பு பணிகளும் முடிவு பெறாமல் நீண்டு கொண்டே செல்கிறது. சவுக்கு கட்டைகள், மணல் மூட்டைகள், பாறாங்கற்களை கொண்டு வீணாக வெளியேறும் தண்ணீரை முற்றிலுமாக தடுத்து நிறுத்தும் பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இரவு,பகலாக வேலை செய்து வந்தாலும் உடைந்த பகுதியின் வழியாக நீர் வெளியேறி செல்வதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியவில்லை.

உடைப்பு ஏற்பட்ட 6-வது மதகில் இருந்து 13-வது மதகு வரை தண்ணீர் வேகமாக வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது. மணல் மூட்டைகள் அடுக்கப்பட்ட இடத்தில் குறைந்த அளவிலேயே தண்ணீர் கசிந்து செல்கிறது. அந்த கசிவினை கரும்பு சக்கைகள், வாழைச்சருகுகள் மூலம் அடைத்து வருகிறார்கள் தொழிலாளர்கள். ஆனால் 13-வது மதகிற்கும் 14-வது மதகிற்கும் இடைப்பட்ட பகுதியில் தான் பாறாங்கற்களுக்கு இடையே தண்ணீர் இன்னும் அதிக அளவில் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனை அடைக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள். நன்றாக நீச்சல் தெரிந்த தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் 20 அடி ஆழ தண்ணீருக்குள் மூழ்கி, மூச்சை அடக்கி ‘தம்’ கட்டிக்கொண்டு வெளியேறும் நீரை அடைப்பதற்கான வேலைகளை செய்து வருகிறார்கள். இருப்பினும் தண்ணீரை தடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

பெரிய பாறாங்கற்களுக்கு இடையே வெளியேறும் தண்ணீரை அடைப்பதற்காக சிறிய அளவிலான கற்களும் கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகின்றன. கரும்பு சக்கைகள் மற்றும் வாழைச்சருகுகள் தொட்டியம், லால்குடி, குளித்தலை, நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வந்து குவிக்கப்பட்டு உள்ளன. சீறிப்பாய்ந்து வெளியேறும் தண்ணீரும், கசிந்து செல்லும் நீரும் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டால் தான் தற்காலிக சீரமைப்பு பணி நிறைவு பெற்றதாக எடுத்துக்கொள்ள முடியும். இந்த பணிகள் நிறைவடைய இன்னும் ஒரு வார காலம் பிடிக்கும், பெருவெள்ளத்தையும் சமாளிக்கும் வகையில் தான் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்