ஆன்லைன் மருந்து வணிகத்தினை தடை செய்யக்கோரி போராட்டம்

ஆன்லைன் மருந்து வணிகத்தினை முற்றிலுமாக தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்படும் என கரூரில் நடைபெற்ற மருந்து வணிகர்கள் நலச்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-09-10 01:05 GMT
கரூர்,

கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் நலச் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோடு சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அபுதாகிர் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன் மற்றும் மாநில செயலாளரும், அகில இந்திய மருந்து வணிகர் சங்க பொருளாளருமான கே.கே.செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் ஆன்லைன் மருந்து வணிகத்தினை முழுமையாக தடை செய்யக் கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வருகிற 20-ந் தேதி மருந்து வணிகர்கள் கருப்பு பட்டை அணிந்து முதற்கட்டமாக எதிர்ப்பை காட்டியும், 28-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது மற்றும் மருந்துக்கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் அறிவுரையின் படி, இனிமேல் ரத்த சோதனை மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்றவற்றை பார்ப்பதில்லை எனவும், காசநோய் சம்பந்தமான மருந்துகள், ஆக்சிடோசி போன்ற ஊசிகள், கருக் கலைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை மருத்துவரின் பரிந்துரையின்றி விற்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மருந்து வணிகர் சங்க நிர்வாகிகள் தமிழ்ச்செம்மல் மேலை.பழனியப்பன், விமலா திருஞானம் மற்றும் செயலாளர் அனிலா ஜெயக்குமார், பொருளாளர் தன்வந்தரி பாலு மற்றும் தமிழ்நாடு மெடிக்கல் ஜெய்னுலாவூதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்