நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் முன்பு இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவில் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகடைகள் அகற்றப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

Update: 2018-09-10 01:13 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவில்வாசல் பகுதியில் பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்காக 50-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் பக்தர்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்காலிக கடைகளை காலி செய்ய புதுக்கோட்டை மாவட்ட திருக்கோவில்களின் செயல் அலுவலர் ராமராஜா சார்பில் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. இந்தநிலையில் அங்கு மீண்டும் தற்காலிக கடைகள் அமைக்கப் பட்டது.

இதையடுத்து நேற்று மாவட்ட திருக்கோவில்களின் செயல் அலுவலர் ராமராஜா, கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார், கோவில் மேற்பார்வையாளர் தெட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவிலுக்கு முன்பு ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50 தற்காலிக பூஜை பொருட்கள் விற்பனை கடைகளை, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டிருந்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அர்ச்சனை தட்டுகள் மற்றும் பூக்களை வாங்க முடியாமல் தவித்தனர். இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தால் கோவிலை சுற்றி போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து தற்காலிக கடை வியாபாரிகள் கூறுகையில், “வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் புதிய கட்டிடங்களை கட்டி நிரந்தரமாக கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்றனர்.

மேலும் செய்திகள்