தொண்டர்கள் உள்ள வரை அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

தொண்டர்கள் உள்ளவரை அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

Update: 2018-09-10 23:30 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி 95,96 வார்டுகளுக்கு உரிய அ.தி.மு.க. முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா தலைமை தாங்கினார். மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி பிரிவு மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் பன்னீர் செல்வம், வக்கீல் முனியாண்டி, ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன், வட்ட செயலாளர்கள் பொன்முருகன், திருநகர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ராம்கிருஷ்ணன் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்கள். கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:–

அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து சென்றவர்கள் பற்றி கவலைப்பட தேவையில்லை. தொண்டர்கள் உள்ள வரை அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது. கட்சிக்குள் கருத்து மோதல் இருக்கும், இருக்கணும். களம் இறங்கிவிட்டால் தொண்டனுக்கு கருத்து மோதல் தெரியாது. எதிரிகளை ஓட,ஓட விரட்டி அடிப்பார்கள். 1996–ம் ஆண்டிற்கு பிறகு தி.மு.க. 100 தொகுதியை கூட கைப்பற்றவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கவர் மிக பெரிய சாணக்கியர். ஆனால் அவரால் அ.தி.மு.க.வை. வீழ்த்த முடியவில்லை. அதேபோல தான் மு.க.ஸ்டாலினாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் கடந்த இடைத்தேர்தலில் 43 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க.வெற்றி பெற்றது. நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 50 ஆயிரம் அல்லது ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:–

இடைத்தேர்தல் என்றாலே திருவிழா தான். திருவிழாவில் எல்லோரும் வருவார்கள். பஞ்சு மிட்டாய், பலூன் என்று விற்பனை செய்வார்கள். ராட்டினம்போல சுற்ற விடுவார்கள். அவர்களிடம் மக்கள் ஏமாந்து விடக்கூடாது. டி.டி.வி.தினகரன் தனது கட்சிக்கு ஆள் பிடிக்கிறார். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலின் வெற்றியே அ.தி.மு.க.விற்கு எதிர்காலத்தை நிர்ணக்கும் என்கிறார்கள். நம்மை விட்டு பிரிந்த எதிரிகள் உதிரிகளாகி விட்டனர். உதிரிகள் பொய் பிரசாரம் செய்வார்கள் ஒரு பொய்யை 10 முறை சொல்லி அது உண்மையாக்கி விடுவார்கள். அதில் மக்கள் ஏமாந்து விடக்கூடாது. அ.தி.மு.க.வில் மக்களின் நலம் தர்ம சிந்தனை உள்ளது. ஆனால் உதிரிகளிடம் அதர்மத்தின் வீரம், சுயநலம் உள்ளதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்