கோவை கோர்ட்டு வளாகத்தில் ஓரின சேர்க்கைக்கு எதிராக கோ‌ஷம்: மதபோதகர் மீது வழக்கு

ஓரின சேர்க்கைக்கு எதிராக கோவை கோர்ட்டு வளாகத்தில் மதபோதகர் ஒருவர் கோ‌ஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-10 23:45 GMT

கோவை,

கோவை கோர்ட்டு வளாகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. அப்போது முதல் தளத்தில் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தின் அருகில் உள்ள வராண்டாவில் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து ஒருவர் நடந்து வந்தார். அவர் வக்கீலாக இருக்கலாம் என்று நினைத்ததால் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அவர் திடீரென்று கோ‌ஷமிட்டார். இதனால் அவர் அருகில் நடந்து வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து பின்வாங்கினார்கள். அப்போது அவர் ‘சுப்ரீம் கோர்ட்டு ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளது. அதற்கு மக்கள் ஆதரவு அளிக்க கூடாது. இது சமூகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும். எனவே பொதுமக்கள் ஓரின சேர்க்கைக்கு ஆதரவு தரக்கூடாது’ என்று கூறினார். சுமார் 10 நிமிடங்கள் அவர் சத்தம் போட்டு பேசிய பின்னர்தான் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் அவர் தொடர்ந்து கோ‌ஷம் எழுப்பி கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை கோ‌ஷமிட வேண்டாம் என்று கூறி கீழே அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஜீப்பில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இந்த சம்பவத்தினால் கோவை கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணையில் அவர் பெயர் பெலிக்ஸ் ஜெபசிங் (வயது 29) என்பதும், கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த அவர் மதபோதகராக இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கோவை மாவட்ட நீதிமன்ற அலுவலக ஊழியர் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் மதபோதகர் பெலிக்ஸ் ஜெபசிங் மீது மாநகர போலீஸ் சட்டம் 75–ன் கீழ் (பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல்) வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்