சூப்பர் மார்க்கெட்டில் ரூ.2 லட்சம் நூதன மோசடி

சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் ரூ.2 லட்சம் மோசடி செய்த 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-09-10 22:00 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் ஒரு சூப்பர் மார்க்கெட் உள்ளது. இதை சரவணன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டில், அருகில் உள்ள தனியார் ஓட்டல் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கடந்த 3 மாதங்களாக பொருட்கள் வாங்கி வந்தனர். 

அப்போது ‘பேடிஎம்’ மூலம் பணம் செலுத்துவதாக கூறி, அங்கிருந்த ‘கியூஆர்’ கோர்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்திவிட்டதாக கூறி சென்றனர். இவ்வாறு அவர்கள் கடந்த 3 மாதங்களாக ரூ.2 லட்சத்துக்கும் மேலாக பொருட்கள் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், இந்த பணம் சரவணனின் ‘பேடிஎம்’ கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. 

4 பேரிடம் விசாரணை

இதுபற்றி அவர் மாணவர்களிடம் கேட்டதற்கு, தாங்கள் செலுத்திவிட்டதாக கூறி வந்தனர். இருப்பினும், அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. இதையடுத்து சரவணன் துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தனியார் ஓட்டல் பயிற்சி பள்ளி மாணவர்கள் கிருஷ்ணன், ஸ்டாலின் உள்பட 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் பணம் செலுத்தாமல், ரூ.2 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில், மேலும் 5 மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்