ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்செல்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-10 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் வடக்குமாதவி சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷேர் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி சென்றபோது எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்தனர். இதேபோல சிலமாதங்களுக்கு முன்பு வடக்குமாதவி சாலையில் அம்மன் நகர் அருகே ஏற்பட்ட மற்றொரு விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஒருவர் பலியானார். மேலும் சில விபத்துக்களில் ஷேர் ஆட்டோ பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஷேர் ஆட்டோக்களை உரிமம் பெறாதவர்கள் இயக்குவதை கண்டித்தும், ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்பவர்களின் வாகன உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தியும், வடக்குமாதவி சாலையில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மக்களை ஏற்றுவதை தடுத்து போக்குவரத்தை எளிதாக்க கூடுதலாக மினி பஸ்களை இயக்க வலியுறுத்தியும் பெரம்பலூரில் எளம்பலூர்-சமத்துவபுரம் சாலையில் வடக்குமாதவி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இன்னும் ஒருவாரத்திற்குள் பெரம்பலூரில் ஷேர் ஆட்டோக்களை விதிமுறைகளை மீறி இயக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். போலீசார் குறிப்பிட்ட நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வடக்குமாதவி, ஏரிக்கரை குடியிருப்பு பகுதி, சமத்துவபுரம் ஆகிய பகுதி பொதுமக்களை ஒன்று திரட்டி பெரம்பலூர் புறவழிச்சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். மறியலில் எளம்பலூர்-சமத்துவபுரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்