மாவட்ட செய்திகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு மறியலில் ஈடுபட்ட 89 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அரியலூர் மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 89 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் நேற்று எதிர்க்கட்சிகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் 80 சதவீத கடைகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அடைக்கப்பட்டிருந்தன. அரியலூர் மார்க்கெட் தெரு, காந்தி மார்க்கெட் தெரு, எம்.பி. தெரு, சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, வெள்ளாளர் தெரு, ராஜாஜி தெரு, ரெயிலடி, அரியலூர்-செந்துறை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பால்விற்பனை நிலையம், மருந்தகம், பெட்ரோல் பங்குகளை தவிர்த்து காய்கறி கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அரியலூர் தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல் ஆகியோர் தலைமையில், அக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அரியலூர் தேரடியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அரியலூர் போலீசார் வந்து மறியல் போராட்டம் செய்ய சென்ற இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 35 பேரை கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தி.மு.க. கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் சிவசங்கர், காங்கிரஸ் கட்சியின் அரியலூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், கட்சியின் செய்தி தொடர்பாளர் சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடிக்கு ஊர்வலமாக சென்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து சென்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து, துண்டு பிரசுரங்களை வினியோகித்ததை தடை செய்தனர். அரியலூரில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. தனியார் நிறுவனங்கள் செயல்பட்டன.

இதேபோல் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. ஜெயங்கொண்டம் பகுதி மருந்து கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. மற்ற கடைகள் அடைக்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் கடைவீதி மற்றும் பெட்ரோல் பங்குகள், வங்கிகள், அரசு சார்ந்த அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், மாவட்ட மாதர் சங்க செயலாளர் பத்மாவதி, மாவட்ட மாதர் சங்க துணை செயலாளர் மீனா, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தியாகராஜன், விவசாய தொழிற்சங்க மாவட்ட குழு உறுப்பினர் பூபாலன், கலியமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய குழு உறுப்பினர் பாஸ்கர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெண்கள் உள்பட 19 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

உடையார்பாளையம், தத்தனூர், சுத்தமல்லி, விளாங்குடி, மீன்சுருட்டி, பாப்பாக்குடி, மேலணிக்குழி, ஏரவாங்குடி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு, வடிவார் தலைப்பு, குருவாலப்பர் கோவில் ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

இதேபோல் தா.பழூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பரமசிவம் தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரதராஜன் பேட்டை அருகே ஆண்டி மடம் நான்கு ரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆண்டிமடம் போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண் உள்பட 18 பேரை கைது செய்து ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆண்டிமடம் கடை வீதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.