மாவட்ட செய்திகள்
பெரியபாளையம் அருகே விவசாயி கொலை வழக்கில், தப்பி ஓடிய கடைக்காரர் கைது

விவசாயி கொலை வழக்கில், தப்பி ஓடிய கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
பெரியபாளையம்,

பெரியபாளையம் அருகே உள்ள பெருமாள்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிரெட்டி (வயது 65). விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு ஆரணி அகரம் இருளர் காலனியில் உள்ள செல்வம் (48) என்பவரது கடையில் பொருட்கள் வாங்கும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கடைக்காரர் செல்வம், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் காசிரெட்டியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த காசிரெட்டி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதனால் பயந்துபோன செல்வம் தப்பி ஓடிவிட்டார்.

கடைக்காரர் செல்வத்தை உடனடியாக கைது செய்யக்கோரி கொலையான காசிரெட்டியின் உறவினர்கள், ஆரணி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் கும்மிடிப்பூண்டியில் பதுங்கி இருந்த கடைக்காரர் செல்வத்தை, சில மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.