அடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

விருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பகுதிகளில் அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-09-10 22:15 GMT

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனி மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

செங்கோட்டை கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் 200 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் காலனிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு 2 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. எங்களுக்கு ஏன் குடிநீர் தர மறுக்கிறீர்கள் என கேட்பதற்கு அச்சமாக உள்ளது.குடிநீர் இணைப்பு இருந்தும் பிற பகுதிகளை போல் எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதியும் இல்லை. சுகாதார வளாகம் கட்டித்தரப்படவில்லை. மிகவும் மோசமான நிலையில் வசித்து வருகிறோம்.ஏங்கள் பகுதியை நேரடியாக ஆய்வு செய்து எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் உள்ள கண்ணார்பட்டி காலனியில் வசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதிதமிழர் கட்சி செயலாளர் பொன்னுசாமி தலைமையில் அருந்ததியர் சமுதாய மக்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் பகுதியில் வைத்தியலிங்காபுரம், இனாம் செட்டிகுளம், இடையங்குளம், மேட்டுமுள்ளிகுளம், மம்சாபுரம், இடையபொட்டல் பட்டி, ரைட்டன்பட்டி, நாச்சியார் பட்டி, குப்பான்மடம், பூவாணி, கண்ணார்பட்டி, வேப்பங்குளம், பேயம்பட்டி, சொம்பகுளம், ஆகிய கிராமங்களில் அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. இதுகுறித்து பல முறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மனுக்கள் கொடுத்து பலனில்லை என எங்கள் சமுதாய மக்கள் கூறுகின்றனர். எனவே ஏழை எளிய மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், காரியாபட்டி பேரூராட்சியில் 2–வது மற்றும் 14–வது வார்டில் முடக்கமடைந்துள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தினை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் காரியாபட்டி பஸ் நிலையபகுதியில் உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க கோரியும் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்