மாவட்ட செய்திகள்
மணப்பாறையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் 70 பேர் கைது

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து மணப்பாறையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினர் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணப்பாறை,

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, திருச்சி மாவட்டம் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஆகிய ஒன்றிய பகுதிகளிலும், துவரங்குறிச்சியிலும் போராட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மணப்பாறை நகரில், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது. அதன்படி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகரச் செயலாளர் முகமது உசேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் ராஜகோபால் ஆகியோர் தலைமையில் கோவில்பட்டி சாலையில் இருந்து கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பியபடி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ரெயில் நிலையம் நோக்கிச் சென்றனர்.

ரெயில் நிலையத்திற்கு அருகே சென்றதும் மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர்கள் அப்துல் கபூர், அனுஷா மனோகரி ஆகியோர் தலைமையில் போலீசார் தடுப்புகளை அமைத்து ரெயில் நிலையம் செல்ல விடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸ் பாதுகாப்பையும் மீறி 3 பேர் ரெயில் நிலையத்திற்கு உள்ளே சென்று அங்கு திருநெல்வேலியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி செல்ல தயாராக நின்ற பயணிகள் ரெயில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ரெயிலை மறிக்க முயன்றதாக மொத்தம் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

புத்தாநத்தம் கடைவீதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 23 பேரை புத்தாநத்தம் போலீசார் கைது செய்தனர். தமிழர் தேசிய முன்னணி இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் உலகநாதன் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மோட்டார் சைக்கிளை ஒரு தட்டு ரிக்‌ஷாவில் ஏற்றி கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலை முன்பு இருந்து பஸ் நிலையம் வரை மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடியே சென்றார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, திருச்சி புறநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஜெயசீலன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிவசூரியன் ஆகியோர் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நெ.1 டோல்கேட் ராகவேந்திரா நகரில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக சென்றனர்.

அங்கு சென்றதும் அவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் 4 பெண்கள் உள்பட 72 பேரை கைது செய்தனர்.

திருவெறும்பூரில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.நடராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த வேங்கை சுப்ரமணியன் தலைமையில் திருவெறும்பூர் டி.நகரில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். இதையடுத்து திருவெறும்பூர் மேம்பாலம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அவர்கள் அனைவரும் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவெறும்பூர் போலீசார் மறியலில் ஈடுபட்டதாக பெண்கள் உள்பட 98 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

உப்பிலியபுரம் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உப்பிலியபுரம் காங்கிரஸ் வட்டார தலைவர் கீழப்பட்டி ரெங்கராஜ் தலைமை தாங்கினார். தி.மு.க.ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் முன்னிலை வகித்தார். இதில், தி.மு.க அவைத்தலைவர் ஆர்.கே. துரைசாமி உள்பட காங்கிரஸ், தி.மு.க.வை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.