எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கத்தி முனையில் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபர் சிக்கினார்

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கத்தி முனையில் பயணிகளிடம் செல்போன் பறித்து வந்த வாலிபரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

Update: 2018-09-10 22:15 GMT
மும்பை,

மும்பை பாந்திரா டெர்மினஸ் நோக்கி கடந்த 6-ந்தேதி அதிகாலை எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் போரிவிலி தாண்டி வந்தபோது, வாலிபர் ஒருவர் கத்திமுனையில் பயணி ஒருவரின் செல்போனை பறித்தார். பின்னர் அவர் சாந்தாகுருஸ் அருகே ரெயில் மெதுவாக சென்றுகொண்டிருந்த போது, கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.

இந்தநிலையில், அதே வாலிபர் 7 மற்றும் 8-ந் தேதிகளிலும் அதிகாலை நேரத்தில் மும்பைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 3 பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்து உள்ளார்.

போலீஸ்காரரிடம் மிரட்டல்

இந்த புகார்களை தொடர்ந்து, அந்த வாலிபரை பொறி வைத்து பிடிப்பதற்காக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவத்தன்று அதிகாலை பாந்திரா டெர்மினஸ் நோக்கி வந்து ெகாண்டிருந்த சவுராஸ்டிரா ஜனதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் போல் ஏறினர்.

போரிவிலியில் இருந்து புறப்பட்ட போது, அந்த ரெயிலில் பொதுப்பெட்டியில் செல்போன் பறிப்பு வாலிபர் ஏறினார். அவர் சாதாரண உடையில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஜமல் அகமது என்பவரிடம் அவர் பயணி என கருதி கத்தியை காட்டி மிரட்டி செல்போனை தரும்படி மிரட்டினார்.

வாலிபர் கைது

அப்போது, ஜமல் அகமதுவுடன் சாதாரண உடையில் இருந்த ரகுநாத் கோலி, ராம்நிவாஸ் ஆகிய 2 போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அப்போது, அந்த வாலிபர் தான் வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் ராம்நிவாசின் காலில் கிழித்தார். இதில் அவர் லேசான காயம் அடைந்தார்.

இருப்பினும் போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பாந்திரா ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில், அவரது பெயர் அஜய் பிரகாஷ் தோண்டி (வயது30) என்பது தெரியவந்தது. போரிவிலியில் நடைபாதையில் வசித்து வரும் அவர் மீது அந்தேரி, போரிவிலி, தகிசர் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்தது தொடர்பாக ரெயில்வே போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்