மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறையில் கடை அடைப்பு போராட்டம்பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட 40 பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறை பகுதியில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது. செம்பனார்கோவிலில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும் நேற்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. அதன்படி தமிழகத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

இதன் காரணமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காந்திஜிரோடு, பட்டமங்கலத்தெரு, கச்சேரி ரோடு, பெரியக்கடைத்தெரு, டவுன் எக்ஸ்டென்ஷன் ரோடு, ரெயிலடி, பூக்கடைத்தெரு, மகாதானத்தெரு, சின்னக்கடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகை கடைகள், ஜவுளி கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள், பழக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மயிலாடுதுறை பகுதியில் கடை வீதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

சீர்காழியில் வர்த்தகர் சங்கம், வர்த்தகர் நல சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டன. இதனால் சீர்காழி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. முழு அடைப்பு போராட்டத்தால் சீர்காழி புதிய பஸ் நிலையம் பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில், மணல்மேடு, திருக்கடையூர், குத்தாலம், பொறையாறு, தரங்கம்பாடி, கொள்ளிடம், புதுப்பட்டினம், புத்தூர், மாதானம், பூம்புகார், திருவெண்காடு, செம்பனார்கோவில், ஆக்கூர், பரசலூர், ஆக்கூர் முக்கூட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் செம்பனார்கோவிலில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு கட்சியின் வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேல், மாவட்ட குழு உறுப்பினர் சிம்சன், வட்டக்குழு உறுப்பினர்கள் காபிரியேல், மார்க்சிஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மத்திய அரசை கண்டித்து ஊர்வலம் நடந்தது. பரசலூர் மேலமுக்கூட்டில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் செம்பனார்கோவில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நிறைவடைந்தது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கியாஸ் சிலிண்டருக்கும், மொபட்டுக்கும் பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலத்தை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.