பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-09-10 22:01 GMT
நாகப்பட்டினம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

அதன்படி நாகையில் நேற்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதில் நாகை கடைத்தெரு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நீலா தெற்கு வீதி, பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்களை தவிர எந்த வாகனங்களும் சரிவர இயக்கப்படவில்லை.

நாகை மாவட்டத்தில் மொத்தம் சுமார் 12 ஆயிரத்து 800 கடைகளில் 10 ஆயிரத்து 240 கடைகள் அடைக்கப்பட்டன. 80 சதவீதம் அளவில் நாகை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் நாகையை அடுத்த நாகூர் நியூ பஜார் லைன், பெரிய கடைத்தெருவில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

திருமருகலில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் திருமருகலில் உள்ள சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை அடைக்கப்பட்டிருந்தது. இதேபோல் சீயாத்தமங்கை, ஆதினக்குடி, அண்ணாமண்டபம், திருப்புகலூர், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும், திருமருகல், திருப்புகலூர், ஏனங்குடி, மருங்கூர், ஆகிய ஊர்களில் உள்ள ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்களும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் அவதிக்குள்ளாயினர். போராட்டம் காரணமாக பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கீழ்வேளூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான தேவூர், வலிவலம், சாட்டியக் குடி, ஆழியூர், சிக்கல், நீலப்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தனியார் பஸ் மற்றும் அரசு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்பட்டன.

வேதாரண்யத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வழக்கம் போல் அரசு, தனியார் பஸ்கள் ஓடின. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்