விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, சிவமொக்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 ரவுடிகள் கைது

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி சிவமொக்கா மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 36 ரவுடிகளை கைது செய்துள்ளோம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரே கூறினார்.

Update: 2018-09-10 23:00 GMT
சிவமொக்கா,

சிவமொக்காவில் வருகிற 13-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க 36 ரவுடிகளை முன்னெச்சரிக்கையாக போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சிவமொக்கா மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு போலீஸ் பயிற்சி மைதானத்தில் 1,100 ரவுடிகளை நேரில் அழைத்து எச்சரித்துள்ளேன்.

மேலும் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 36 ரவுடிகளை கைது செய்து இருக்கிறோம். கைது செய்யப்பட்ட ரவுடிகளின் வீடுகளில் இருந்து பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்திருக்கிறோம்.

சட்டரீதியாக நடவடிக்கை

அதுமட்டுமல்லாமல் சில ரவுகளை சிவமொக்கா மாவட்டத்தைவிட்டு வெளியேற உத்தரவிட்டு இருக்கிறேன். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள பிரபல ரவுடி கீலி இம்ரான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய ஜாமீனை ரத்து செய்ய மீண்டும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்