மாவட்ட செய்திகள்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து முழு அடைப்பு: பஸ்-ஆட்டோக்கள் ஓடின

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. பஸ்-ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.
நெல்லை, 

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு தமிழகத்தில் தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, த.மா.கா., உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

ஆனால், நெல்லை மாவட்டத்தில் இந்த போராட்டத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. நெல்லை, தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், அம்பை, சங்கரன்கோவில், ராதாபுரம் உள்பட மாவட்டம் முழுவதும் பஸ்கள் இயக்கப்பட்டன. கார்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.

நெல்லை டவுன் நயினார்குளம் மார்க்கெட், நெல்லை டவுன் மார்க்கெட், பாளையங்கோட்டை மார்க்கெட் ஆகியவைகள் வழக்கம் போல் செயல்பட்டன. பொதுமக்கள் கூட்டமும் வழக்கம் போல் இருந்தது. பள்ளி, கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. காய்கறி ஏற்றிக் கொண்டு வந்த லாரிகள் எப்போதும்போல் நெல்லை வந்தது. டீக்கடை, பெட்டிக்கடை, வணிக நிறுவனங்கள் உள்பட பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.

தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து கழகத்தை நிர்வாகிகள் பணிக்கு செல்லவில்லை. தற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் நெல்லை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அரசு போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

தொடர்புடைய செய்திகள்