மனைவி பிரிந்து சென்றதால் ரெயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் ரெயில் முன்பு பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். நாகர்கோவில் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-09-10 23:26 GMT
அழகியமண்டபம்,

நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே களியங்காட்டில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இங்கு நேற்று காலையில் தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. அந்த பிணம் ரெயிலில் அடிபட்டு சிதைந்த நிலையில் காணப்பட்டது. மேலும், தண்டவாளம் அருகே சாலையில் ஒரு ஆட்டோவும் நின்று கொண்டிருந்தது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, இறந்து கிடந்தவர் பார்வதிபுரம் அருகே பெருவிளை முருகன் கோவில் பகுதியை சேர்ந்த மார்த்தாண்டன் (வயது 40) என்பது தெரிய வந்தது. ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உண்டு.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக மனைவி, இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு மார்த்தாண்டனை விட்டு பிரிந்து சென்றார். அதன் பின்பு மார்த்தாண்டன் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மனைவி, குழந்தைகளுடன் சென்று விட்டதால் அவர் மனவேதனையில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று தனது ஆட்டோவில் களியங்காடு ரெயில்வே கிராசிங் பகுதிக்கு சென்றார். அங்கு தண்டவாளம் அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு, காலை 8 மணியளவில் நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார்.

இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. தண்டவாளத்தில் பிணம் கிடந்ததால் அந்த ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பிணத்தை போலீசார் அகற்றிய பின்னர் சுமார் ½ மணி நேரம் தாமதமாக பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால், அந்த வழித்தடத்தில் ½ மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்