தண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் போராட்டம்

கள்ளக்குறிச்சியில் தண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-10 22:00 GMT
கள்ளக்குறிச்சி,


கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கச்சிராயப்பாளையம் பகுதி விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்தனர். அவற்றுக்கு கிணற்று தண்ணீர் மூலம் பாசனம் செய்து பராமரித்து வந்தனர். பின்னர் சாகுபடி செய்த பயிர்களுக்கு விவசாயிகள் அனைவரும் காப்பீடு செய்தனர்.

இந்த நிலையில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் கிணறுகள் வறண்டதால் கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதன் காரணமாக பெரும் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கருகிய கரும்பு பயிர்களுக்கு காப்பீட்டு தொகையும், வறட்சி நிவாரணமாக ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வரிசையில் நின்று கருகிய கரும்பு பயிர்களின் புகைப்படத்துடன் கோட்டாட்சியர் தினேஷிடம் மனு கொடுத்து விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்