பதிவு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம்: மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 2 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் வாகனத்துக்கு பதிவு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-09-11 21:45 GMT
கள்ளக்குறிச்சி, 


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் முத்துக்குமார் (வயது 29). இவர் கள்ளக்குறிச்சி-துருகம் சாலையில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(35) என்பவர் தான் வாங்கிய புதிய வேனுக்கு பதிவு சான்றிதழ் வாங்கி தருமாறு முத்துக்குமாரிடம் கூறினார். இதையடுத்து முத்துக்குமார் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவிடம்(55), வேனுக்கு பதிவு சான்றிதழ் வேண்டும் என கேட்டார். அதற்கு அவர் தனது உதவியாளர் செந்தில்குமாரை சந்தியுங்கள், அவர் பதிவு சான்றிதழ் பெறுவதற்கான விவரங்களை கூறுவார் என தெரிவித்தார்.

அதன் பின்னர் முத்துக்குமார் மோட்டார் வாகன ஆய்வாளரின் உதவியாளர் செந்தில்குமாரை(45) அணுகினார். அப்போது அவர் வேனுக்கு பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால், லஞ்சமாக ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என்று கூறினார்.இதில் அதிர்ச்சியடைந்த முத்துக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் பாவுவிடம் சென்று செந்தில்குமார் லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கேட்பதாக கூறினார். அதற்கு அவர், ரூ.25 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பதிவு சான்றிதழ் தர முடியும் என கறாராக கூறி விட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துக்குமார், இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து முத்துக்குமாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சில அறிவுரைகளை கூறி, ரசாயன பொடி தடவிய ரூ.25 ஆயிரத்தை கொடுத்தனர். அந்த பணத்துடன் நேற்று காலை முத்துக்குமார் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த பாபுவிடம் தான் பதிவு சான்றிதழ் பெற ரூ.25 ஆயிரம் கொண்டு வந்துள்ளதாக கூறினார். உடனே அவர் அந்த பணத்தை செந்தில்குமாரிடம் கொடுக்குமாறு கூறினார். அதன் பின்னர் முத்துக்குமார் ரூ.25 ஆயிரத்தை செந்தில்குமாரிடம் கொடுத்தார். அந்த பணத்தை செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். அப்போது அலுவலகத்தின் வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் செந்தில்குமாரையும், பாபுவையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை பார்வையிட்டு சோதனை செய்தனர். லஞ்ச வழக்கில் மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்