மாவட்ட செய்திகள்
மாவட்டத்தில் 1,200 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 1,200 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தர்மபுரி,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்திலும் நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விநாயகர் சதுர்த்தி என்றாலே பிரமாண்ட சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். இதற்காக மாவட்டம் முழுவதும் 1200 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அந்தந்த பகுதி பக்தர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் சிலைகள் வைக்க அனுமதி பெற்று உள்ளனர். சிலைகள் வைக்கும் இடங்களில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் நாளை சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. அந்தந்த கோவில்களில் சாமிக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்கார சேவை நடக்கிறது. இதைத்தொடர்ந்து விநாயகர் திருவீதி உலா நடக்கிறது. விழாவையொட்டி அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற சாலைவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு வழங்க பிரசாத கமிட்டி சார்பில் 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி கடந்த 2 நாட்களாக இரவு-பகலாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோன்று தர்மபுரி நகரில் அனைத்து விநாயகர் கோவில்கள் மற்றும் பென்னாகரம், அரூர், ஏரியூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பொம்மிடி, மொரப்பூர், காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, கம்பைநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகளும் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.