வாலாஜாபாத் பேரூராட்சியில் குடிநீர் திருட்டு; 40 மின் மோட்டார்கள் பறிமுதல்

வாலாஜாபாத் பேரூராட்சியில் குடிநீர் குழாய் இணைப்பு பெற்ற வீடுகளில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 40 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-09-11 22:30 GMT
வாலாஜாபாத்,

வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் குடிநீர் சரிவர வருவதில்லை என பல்வேறு தரப்பினர் வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்திருந்தனர்.

குடிநீர் பிரச்சினையை சமாளிக்க பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் குடிநீர் தட்டுப்பாடுடன் இருந்து வந்தது. வாலாஜாபாத் பேரூராட்சியில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுள்ளவர்கள் குடிநீர் இணைப்பு குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை திருடி ஆழ்நிலை தொட்டிகளில் நிரப்பி வருவது தான் என்பது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் வாலாஜாபாத் பேரூராட்சிகு உட்பட்ட ராஜவீதி பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பேரூராட்சி செயல் அலுவலர் மத்தியாஸ் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் காவல்துறை உதவியுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

40 மின் மோட்டார்கள் பறிமுதல்

ஆய்வின்போது குடிநீர் குழாய் இணைப்பு பெற்றிருந்த வீடுகளில் குடிநீர் வரும் குழாய்களில் பொருத்தியிருந்த 40 மின் மோட்டார்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அனுமதியின்றி குழாய்களில் மின் மோட்டார் பொருத்தி இருந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன் குழாய்களில் பொருத்தி இருந்த 40 மின் மோட்டார்களை செயல் அலுவலர் மத்தியாஸ் உத்தரவின்படி போரூராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்