ரூ.500 கோடியை உடனே வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் ரூ.500 கோடியை உடனே வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளதாக ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2018-09-11 21:45 GMT
ஈரோடு, 

தனியார் அமைப்பு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா ஈரோடு திண்டல் வேளாளர் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை பள்ளிகளில் சுகாதார பணிகளுக்கு தேவையான நிதி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியை வைத்துக்கொண்டு துப்புரவு பணியாளர்களை நியமித்து சுகாதார பணிகளை செய்யலாம்.

அரசு பள்ளிக்கூடங்களின் மேம்பாட்டுக்காக அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறுகிய காலத்தில் எந்த செயலையும் செய்துவிட முடியாது. படிப்படியாகத்தான் செய்ய வேண்டும். ஏனென்றால் தமிழகம் முழுவதும் 57 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில் 82 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்தியாவிலேயே எங்கும் செயல்படுத்த முடியாத திட்டங்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஒரு புதிய ஆணையை பிறப்பித்து உள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் ரூ.7 ஆயிரத்து 500 சம்பளத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் மூலமாக நிரப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. அதற்கான பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி அதிகாரிகளும் செய்து வருகிறார்கள். இனி எதிர்காலத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் காலிப்பணியிடங்களே இருக்காது.

தற்காலிக ஆசிரியர்கள்

மகப்பேறு காலத்தில் 9 மாதம் விடுமுறையில் செல்லும் பெண் ஆசிரியர்களுக்கு பதிலாக, தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் இந்தி மொழி கிடையாது. உருது, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் பேசுபவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அரசு பள்ளிக்கூடங்களை மேம்படுத்த தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 10 சதவீதம் தனியார் பங்களிப்பு வந்துள்ளது. இதுதொடர்பாக தொழில் அதிபர்களுடன் நடந்த கூட்டத்திற்கு பிறகு ரூ.3 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது. தனியார் பங்களிப்புடன் பல அரசு பள்ளிக்கூடங்களில் கழிப்பிட வசதிகள், ஸ்மார்ட் வகுப்பு அமைத்தல் என சிறு, சிறு வேலைகள் நடந்து வருகிறது. வருகிற பொங்கல் பண்டிகைக்குள் அனைத்து அரசு பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும் வகையில் வெள்ளை அடித்து தரப்படும். அதற்கான உத்தரவை முதல்-அமைச்சர் பிறப்பித்து உள்ளார்.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் படித்ததற்கு மத்திய அரசு ரூ.1,500 கோடியை தராமல் பாக்கி வைத்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் கேட்ட பிறகு ரூ.102 கோடியை வழங்கியது. எனவே இந்த முறை குறைந்தது ரூ.500 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். இதற்காக மத்திய அமைச்சரை நேரடியாக சந்தித்து பேச உள்ளேன். அரசு பள்ளிகளை பொறுத்தவரை வீட்டுப்பாடங்கள் கொடுப்பதில்லை. அப்படி கொடுப்பது தெரியவந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள போட்டித்தேர்வுகளை மாணவ-மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக நிறைய செய்திகளை தெரிந்துகொள்ளவும், நிறைய பாடங்களை படிக்க வேண்டும் என்கிற நிலையில் சிறந்த கல்வியாளர்களை கொண்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான பாடப்புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் 9 துணைவேந்தர்கள் கொண்ட குழு செயல்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீசன், கோவிந்தராஜன் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்