தட்டார்மடம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை: தாய்–தம்பி உள்பட 3 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

தட்டார்மடம் அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்த தாய்–தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-11 21:00 GMT
தட்டார்மடம், 

தட்டார்மடம் அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்த தாய்–தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி அடித்துக் கொலை 

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள தச்சன்விளை பள்ளம்தட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் முத்துகுமார் (வயது 34). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல், அடிக்கடி மது குடித்து விட்டு தன்னுடைய குடும்பத்தினரிடம் தகராறு செய்தார். கடந்த 9–ந்தேதி மாலையில் முத்துகுமார் மது குடித்து விட்டு, தன்னுடைய தாயார் கிருஷ்ணவேணியை (58) அவதூறாக பேசி, அவரது கையில் கடித்து தாக்கினார்.

உடனே கிருஷ்ணவேணி மற்றும் அவருடைய இளைய மகன் சுயம்புலிங்கம் (24), மருமகன் மாரியப்பன் (35) ஆகிய 3 பேரும் சேர்ந்து முத்துகுமாரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த முத்துகுமாரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

3 பேர் கைது 

இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கிருஷ்ணவேணி, சுயம்புலிங்கம், மாரியப்பன் ஆகிய 3 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த கிருஷ்ணவேணி, சுயம்புலிங்கம், மாரியப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைதான கிருஷ்ணவேணி போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:–

வாக்குமூலம் 

என்னுடைய மூத்த மகன் முத்துகுமாருக்கு கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்தோம். ஆனாலும் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு, குடும்பத்தினரிடம் தகராறு செய்தார். கடந்த 9–ந் தேதி முத்துகுமார் மதுகுடித்து விட்டு, என்னை அவதூறாக பேசி, கையில் கடித்து தாக்கினார். உடனே நான் மற்றும் என்னுடைய இளைய மகன் சுயம்புலிங்கம், மருமகன் மாரியப்பன் ஆகிய 3 பேரும் சேர்ந்து முத்துகுமாரை தாக்கினோம்.

இதில் மயங்கி விழுந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தோம். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துகுமார் உயிரிழந்தார். பின்னர் நாங்கள் போலீசாருக்கு பயந்து வெளியூருக்கு தப்பி செல்வதற்காக திசையன்விளை பஸ் நிலையத்துக்கு சென்றோம். அங்கு போலீசார் எங்களை கைது செய்தனர்.

இவ்வாறு கிருஷ்ணவேணி போலீசாரிடம் தெரிவித்தார்.

சிறையில் அடைப்பு 

கைதான கிருஷ்ணவேணி, சுயம்புலிங்கம், மாரியப்பன் ஆகிய 3 பேரையும் போலீசார் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 3 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சரவணன் உத்தரவிட்டார். கிருஷ்ணவேணியை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும், சுயம்புலிங்கம், மாரியப்பன் ஆகிய 2 பேரையும் தூத்துக்குடி அருகே பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்