13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-09-11 23:00 GMT
திருச்சி,

தமிழகம் முழுவதும் நோயாளிகள் மற்றும் விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ்கள் இலவசமாக இயங்கி வருகிறது. இந்த ஆம்புலன்ஸ்களில் பணியாற்றும் டிரைவர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் கால்சென்டர் பணியாளர்கள் ‘தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்’ என்ற ஒரு அமைப்பை புதிதாக தொடங்கி உள்ளனர். இந்த சங்கம் தொ.மு.ச. பேரவையுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

இந்த சங்கத்தின் சார்பில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் இருளாண்டி தலைமை தாங்கினார். திருச்சி மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தொ.மு.ச. பேரவை மத்திய சங்க செயலாளர் குணசேகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 6 மாத காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வினை காலதாமதம் இன்றி உடனடியாக வழங்கவேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள சரண்டர் விடுமுறைக்கான சம்பள தொகையை வழங்க உத்தரவிடவேண்டும். எந்தவித காரணமும் இன்றி இடமாற்றம் செய்யக்கூடாது. அரசு வழங்கிய ஊதிய உயர்வினை தொழிலாளர்களுக்கு வழங்காமல் ஏமாற்றிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

6 மாதத்திற்கு ஒரு முறை அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடங்களில் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும். தற்போது 12 மணி நேரம் என இருக்கும் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்கவேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்க மாநில பொருளாளர் அருள் பிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் தேசிங்கு ராஜா, ஜான், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், மாநில தலைவர் இருளாண்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சியில் தான் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் பற்றி அறிவிக்கப்படும். ஓய்வில் உள்ள தொழிலாளர்கள் தான் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இருப்பதால் ஆம்புலன்ஸ் சேவையில் பாதிப்பு ஏற்படாது’ என்றார்.

மேலும் செய்திகள்