பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி

பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி இன்று நடக்கிறது.

Update: 2018-09-11 22:30 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் மாவட்ட பிரிவின் சார்பில் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் சைக்கிள் போட்டிஇன்று (புதன்கிழமை) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெறுகிறது. சைக்கிள் போட்டி ரவுண்டானாவிலிருந்து பாலக்கரை சென்று மீண்டும் ரவுண்டானா வந்தடைவதற்கான வழித்தடத்தில் இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களது சொந்த செலவில் சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும். மாணவ-மாணவிகள் பள்ளி தலைமையாசிரியரிடம் வயது சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும். மாணவ-மாணவிகள் போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டி நடத்தப்படும் இடத்திற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. (வயது வரம்பு 6, 7, 8-ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்). 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. (வயது வரம்பு 9, 10-ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்). 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது. (வயது வரம்பு 11, 12-ம் வகுப்பு படிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.)

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகள், முதல் பத்து இடங்களை பெறுபவர்களுக்கு போட்டியில் கலந்து கொண்டமைக்கான தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளை பள்ளி வயது சான்றிதழுடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்