கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தைப்புலி

குன்னூர் அருகே கன்று குட்டியை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது. இதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் பீதியடைந்தனர்.

Update: 2018-09-11 21:30 GMT
குன்னூர், 

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடி ஆகியவை குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரஞ்ச் குரோவ் பகுதியில் தெருநாய்களை சிறுத்தைப்புலி தாக்கியது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைக்கு பிறகு சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினரால் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால் அந்த கூண்டில் எதுவும் சிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை குன்னூர் அருகே வண்டிச்சோலை ஸ்பிரிங்பீல்டு பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் நாராயணன் என்பவர் தனது கன்று குட்டியை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மதியம் 2 மணியளவில் கன்று குட்டி அலறும் சத்தம் கேட்டது. உடனே தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது கன்று குட்டியை சிறுத்தைப்புலி அடித்து கொன்று, அதன் இறைச்சியை தின்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதை பார்த்து பீதி அடைந்த தொழிலாளர்கள், உடனே அங்கிருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு ஓட்டம் பிடித்தனர். மேலும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கிருந்து சிறுத்தைப்புலி தப்பி ஓடிவிட்டது.

தகவலின்பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனகால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அதில் கன்று குட்டியை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது உறுதியானது. பின்னர் வனத்துறையினர் கூறுகையில், சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் வீட்டை விட்டு யாரும் தனியாக வெளியே வர வேண்டாம்.

குழந்தைகளை விளையாட எங்கும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இதற்கிடையே கன்று குட்டியை அடித்து கொன்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்