மோப்பநாய் உதவியுடன் வாகன சோதனை

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் மோப்பநாய் உதவியுடன் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2018-09-11 21:30 GMT
மசினகுடி,


நீலகிரி மாவட்டத்தில் கூடலூர்- கக்கநல்லா மற்றும் தெப்பக்காடு-மசினகுடி-கல்லட்டி ஆகிய 2 நெடுஞ்சாலைகள் முக்கியமானதாக விளங்குகிறது. முதுமலை புலிகள் காப்பகம் வழியாக செல்லும் அந்த சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் கக்கநல்லா சோதனைச்சாவடியில் போலீசாரின் சோதனைக்கு பின்னரே நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகின்றன. அப்போது குட்கா, கஞ்சா, மதுபானங்கள் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள அந்த சாலைகள் வழியாக வன கொள்ளையர்கள் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து அறிய கடந்த 2 நாட்களாக மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பணியில் தெப்பக்காடு வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று தொரப்பள்ளியில் உள்ள வன சோதனைச்சாவடியில் மோப்பநாய் உதவியுடன் வாகன சோதனை நடந்தது. இதுகுறித்து வனச்சரகர் ராஜேந்திரன் கூறும்போது, ஆப்பர் என்ற மோப்பநாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் உள்ள எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டது. வன கொள்ளையர்களை பிடிக்க தேவையான பயிற்சி அந்த நாய்க்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் எந்த கடத்தல் பொருட்களும் பிடிபடவில்லை. இன்று(புதன்கிழமை) கக்கநல்லா சோதனைச்சாவடியில் மோப்பநாய் உதவியுடன் வாகன சோதனை நடைபெற உள்ளது என்றார். 

மேலும் செய்திகள்