மாவட்ட செய்திகள்
20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது

கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவர் கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தபோது சிக்கினார்.
கோவை,

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டில் அரசு ஆஸ்பத்திரி, பெரியகடைவீதி, காந்திபுரம் ஆகிய பகுதிகளில் தொடர்குண்டுகள் வெடித்தன. இதில் 51 பேர் பலியானார்கள். 117 பேர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் 157 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்களில் பலர் கோவை மத்திய சிறையில் உள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பண்ணியங்கரா கிராமம் திருவன்னு பகுதியை சேர்ந்த என்.பி. நூகு என்கிற ரஷீத் என்கிற மாங்காவு ரஷீத் (வயது 44) என்பவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் வெளிநாடு தப்பி ஓடிவிட்டதால், பிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் கோர்ட்டு மூலம் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

எனவே அவர் இந்தியா வந்ததும் கைது செய்யும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவருடைய புகைப்படமும் அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் அவர் இந்தியா வந்தாரா? என்பது குறித்தும் தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வளைகுடா நாடான கத்தாரில் இருந்து ஒரு விமானம் சென்னை வந்தது. அந்த விமானத்தில் இருந்து வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவருடைய பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது, அவர் ரஷீத் என்பதும், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது.

உடனே குடியுரிமை அதிகாரிகள் இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, ரஷீத்தை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் நேற்று காலையில் பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தனர். பின்னர் கோவை 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ரஷீத்தை ஆஜர்படுத்தினார்கள்.

மாஜிஸ்திரேட்டு இனியா கருணாகரன், அவரை வருகிற 24-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ரஷீத்தை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவையில் நடந்த தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ரஷீத் கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்துள்ளார். பல நாடுகளில் சுற்றித்திரிந்த அவர் கடைசியாக கத்தார் நாட்டில் வேலை செய்து வந்தார். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இவர்தான் மூளையாக செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்துள்ளார்.

எனவே குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரஷீத்துக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை செய்வதற்காக அவரை காவலில் எடுக்க முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக ஓரிரு நாட்களில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும். ரஷீத் மீது கூட்டு சதி, கொலை, பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், வெடிபொருள் உபகரண சட்டம் உள்பட 18 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.