குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

முத்தம்பட்டியில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.

Update: 2018-09-11 22:45 GMT
லாலாபேட்டை,

கடவூர் ஒன்றியம் வடவம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதில் நீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி நேற்று கரூர்- பஞ்சப்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடவூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மனோ கரன் மற்றும் லாலாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், முத்தம்பட்டி பகுதியில் உடனே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கரூர்- பஞ்சப்பட்டி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்