நவம்பர் 6-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை

நவம்பர் மாதம் 6-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்து பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் கண்ணன் அறிவித்துள்ளார்.

Update: 2018-09-11 22:00 GMT
பொள்ளாச்சி, 

தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சி கூட்டரங்கில் நேற்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி கமிஷனர் கண்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் எளிதில் மக்காது. மண்வளம் பாதிப்பு மற்றும் மழைநீர், கழிவுநீர் செல்லும் பாதைகள் தடைபடுகின்றன. பிளாஸ்டிக் பைகளை எரிக்கும்போது ஏற்படும் புகையினால் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. நிலத்தடி நீர் மாசுபடுகிறது. ஆடு, மாடுகள் பிளாஸ்டிக் பைகளை உண்பதால் இறக்க நேரிடுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் உபயோகிக்க கூடாது.

துணிப்பை, சணல் பைகளை உபயோகிக்க வேண்டும். யாரையும் தொந்தரவு செய்ய வேண்டும் என்பது எங்களது நோக்கம் இல்லை. பிளாஸ்டிக்கை விற்பனை செய்ய, பயன்படுத்த போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. நகராட்சிகளில் கடந்த 2016-ம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை துணை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. யாருக்கும் புற்றுநோய் ஏற்பட நாம் காரணமாக இருக்க கூடாது. குப்பை கிடங்கை ஆய்வு செய்ததில் பொள்ளாச்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் உள்ளது தெரியவந்தது.

பிளாஸ்டிக் ஆபத்தான பொருள். தீப்பிடித்து எரிந்து அதனால் வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி காந்தி ஜெயந்தி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். இந்த தீபாவளியை பசுமை தீபாவளியாக கொண்டாட வேண்டும். எனவே தீபாவளி பண்டிகை (நவம்பர் 6-ந்தேதி) முதல் பொள்ளாச்சி நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

இதுதொடர்பான விழிப்புணர்வு பலகையை அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளிலும் வைக்க வேண்டும். நீங்கள் முயற்சி செய்தால் நிச்சயம் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும். பொதுமக்களும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல், துணி பைகளை பயன்படுத்த வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக பொள்ளாச்சியில் பிளாஸ்டிக்கை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், பிளாஸ்டிக் விற்பனையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் கலந்துகொண்டு பேசியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருள் வராமல், அதை ஒழிக்க முடியாது. பிளாஸ்டிக் பொருட்களில் எதை விற்பனை செய்ய கூடாது. எதை விற்பனை செய்யலாம் என்ற விவரத்தை தெளிவாக கூற வேண்டும். சங்கத்தினருக்கு மட்டும் பிளாஸ் டிக் பயன்பாடு மற்றும் தடை குறித்து தகவல் தெரிவிக்காமல், ஒவ்வொருவருக்கும் தனி, தனியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடன் வாங்கி தான் இந்த தொழிலை செய்து வருகிறோம்.

இன்னும் விற்பனை செய்த பணத்தை வசூல் செய்ய வேண்டிய உள்ளது. எனவே கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும். காந்தி ஜெயந்தி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கவும், தீபாவளி முதல் முற்றிலும் நிறுத்தவும் முயற்சி செய்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் நகர் நல அலுவலர் மாணிக்கவேல்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், ரவிச்சந்திரன், தர்மராஜ், சீனிவாசன், ஞானசேகர், ஜெயபாரதி, விஜய் ஆனந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்